சென்னை:ஆகம விதிகளுக்கு புறம்பாக கோவிலுக்குள், முதல் உதவி மையம் அமைக்கும் விவகாரத்தில், 'மருத்துவ மையம் அமைக்க தடைக்கல்லாக இருக்க வேண்டாம்; படிக்கல்லாக இருங்கள்' என, ஹிந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு கூறியிருப்பது, பக்தர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.
பக்தர்கள் அதிகளவில் வருகை தரும், மலைக்கோவில் உள்ளிட்ட, பிரதான கோவில்களில், மருத்துவ உதவி மையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் முதலுதவி மையம் அமைக்கப்பட்டது.
'இது ஆகம விதிகளுக்கு எதிரானது' என பக்தர்கள், ஆன்மிகவாதிகள், ஹிந்து அமைப்பினர் ஆட்சேபனை தெரிவித்து வருகின்றனர்..
இதற்கு அமைச்சர் சேகர்பாபு அளித்துள்ள விளக்கம்:
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு, தமிழகம் மட்டுமல்லாமல், வெளிமாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தினசரி வருகின்றனர்.
மலைக் கோவில்கள், பக்தர்கள் அதிகம் வரும் கோவில்களில் மருத்துவ மையம் அமைக்க வேண்டும் என்பது, முதல்வர் உத்தரவு.
அதன்படி, மதுரை மீனாட்சி அம்மன், பண்ணாரியம்மன், இருக்கன்குடி, ராமேஸ்வரம், சங்கரன்கோவில் ஆகிய இடங்களில் மருத்துவ மையங்கள் அமைக்கப்படுகின்றன.
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் வளாகத்தில், இந்த மருத்துவ மையம் இல்லை. வளாகத்திற்கு வெளியே உள்ள உட்பிரஹாரத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு அசவுகரியம் ஏற்பட்டால், உடனடியாக முதலுதவி சிகிச்சை அளித்து, உயிர்களை காப்பாற்ற வேண்டும் என்பதுதான் நோக்கம்.
எந்த அமைப்பாக இருந்தாலும், இந்த மருத்துவ மையத்தை வரவேற்று, மகிழ்ச்சி அடைய வேண்டும். இதற்கு தடைக்கல்லாக இருக்க வேண்டாம்; படிக்கல்லாக இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆன்மிக அமைப்பினர் கூறியதாவது:
மருத்துவ மையம் வேண்டாம் என சொல்லவில்லை. கோவில் வளாகத்திற்குள் மனித ரத்தம் சிந்துவது, ஆகம விதிகளுக்கு புறம்பானது என்பதை புரிந்துக் கொள்ள வேண்டும்.
கோவில் பிரஹாரத்திற்கு வெளியே மருத்துவ மையம் அமைப்பதால், பக்தர்களுக்கு வசதியாக இருக்கும். பல விஷயங்களை ஆகம வல்லுனர்களை கேட்டு செய்வதாக கூறும் அமைச்சர், இந்த விஷயத்திலும், அவர்களை கேட்டு செய்திருக்கலாம்.
எனவே, பக்தர்கள், ஆன்மிகவாதிகள், ஹிந்து அமைப்பினரின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, ஆகம வல்லுனர்களை கலந்தாலோசனை நடத்தி, கோவில் பிரஹாரத்திற்கு வெளியில் மருத்துவ மையம் அமைக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.