சென்னை:சென்னையில் குடியரசு தின விழாவை, காமராஜர் சாலையில் எந்த இடத்தில் நடத்துவது என, அதிகாரிகள் தரப்பில் ஆலோசனை நடந்து வருகிறது.
தமிழக அரசு சார்பில், ஆண்டுதோறும் சுதந்திர தின விழா, தலைமை செயலகம் அமைந்துள்ள கோட்டை கொத்தளத்தில் நடக்கும். முதல்வர் தேசியக் கொடி ஏற்றி, அணிவகுப்பு மரியாதையை ஏற்பார்.
குடியரசு தின விழா, மெரினா கடற்கரையை ஒட்டியுள்ள, காமராஜர் சாலையில், டி.ஜி.பி., அலுவலகம் முன், காந்தி சிலை அருகே நடக்கும்.
கவர்னர் தேசியக் கொடியை ஏற்றி, அணிவகுப்பு மரியாதையை ஏற்பார். சுதந்திர தின விழாவை விட, குடியரசு தின விழா வெகு விமரிசையாக கொண்டாடப்படும். முப்படை வீரர்கள் முதல் நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் வரை அணிவகுத்து வருவர்.
போலீஸ் அணிவகுப்பை தொடர்ந்து, மாணவ - மாணவியர் மற்றும் கலைக் குழுவினரின் கலை நிகழ்ச்சிகள் நடக்கும். வெளி மாநில கலைக்குழுவினரும் பங்கேற்பர். கலை நிகழ்ச்சியை தொடர்ந்து, அலங்கார வாகனங்களின் அணிவகுப்பு நடக்கும்.
வழக்கமாக குடியரசு தின விழா நடக்கும் பகுதியில், தற்போது மெட்ரோ ரயில் பணிகள் நடந்து வருகின்றன. இதனால், அப்பகுதியில் இந்த ஆண்டு குடியரசு தின விழா நடத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
அதைத் தொடர்ந்து, மெரினா கடற்கரையில் அமைந்துள்ள காமராஜர் சாலையில், எந்த பகுதியில் விழா நடத்தலாம் என, அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர். உழைப்பாளர் சிலை அல்லது விவேகானந்தர் இல்லம் அருகே இடம் தேர்வு செய்யப்பட உள்ளது.
இதுகுறித்து, அதிகாரிகள் கூறியதாவது:
கடந்த இரண்டு ஆண்டுகளாக, கொரோனா கட்டுப்பாடு காரணமாக, அணிவகுப்பில் குறைந்த அணிகளே இடம் பெற்றன. வாகன அணிவகுப்பும் குறைவாக இருந்தது; பொதுமக்களும் அனுமதிக்கப்படவில்லை.
இம்முறை வழக்கமான அணிவகுப்பு, அலங்கார வாகனங்கள் அணிவகுப்பு இடம் பெறும். பொதுமக்களும் அனுமதிக்கப்படுவர். கலை நிகழ்ச்சிகளும் இடம் பெறும். எனவே, அதற்கேற்ப இடம் தேர்வு செய்ய வேண்டும்.
காமராஜர் சாலையில் தேர்வு செய்யப்பட்டு சில இடங்களை, காவல் துறையினர், பொதுப்பணித் துறையினர் பார்வையிட்டு ஆய்வு செய்துள்ளனர்; விரைவில் இடம் முடிவு செய்யப்படும்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.