சென்னை:தமிழக கவர்னர் ரவிக்கு எதிராக, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. எந்த அடிப்படையில் கவர்னர் பதவியில் நீடிக்கிறார் என்பதற்கு, அவரிடம் விளக்கம் கோரும்படி, மனுவில் கூறப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்துாரைச் சேர்ந்த எம்.கண்ணதாசன் என்பவர் தாக்கல் செய்த மனு:
புதுச்சேரியில் உள்ள, 'ஆரோவில் பவுண்டேஷன்' நிர்வாக குழு தலைவராக, தமிழக கவர்னர் ரவியை, 2021 அக்டோபரில் மத்திய அரசு நியமித்துள்ளது. ஆரோவில் அமைப்பு சட்டப்படி, முழு நேரத் தலைவராக அவர் இயங்குகிறார்.
இந்தப் பதவிக்கு, சம்பளம் மற்றும் விடுமுறை, பென்ஷன், பி.எப்., என இதர சலுகைகள் உண்டு. அரசியலமைப்பு சட்டத்தின்படி, கவர்னர் வேறு ஆதாயம் தரும் பதவி வகிக்கக் கூடாது.
சம்பளம் மற்றும் சலுகைகள் பெற உரிமை உள்ள பதவியை கவர்னர் ஏற்றுள்ளதால், அவருக்கு தகுதியிழப்பு ஏற்படுகிறது.
கவர்னராக பதவியில் நீடிக்க அவருக்கு உரிமை இல்லை. தற்போது, கவர்னராக அவர் பதவி வகிப்பது செல்லாது. ஆரோவில் அமைப்பு சட்டப்பூர்வமானது; தனிப்பட்ட அமைப்பு அல்ல. அரசியலமைப்பு சட்டப்படி, கவர்னர் ரவி செயல்பட வேண்டும். அவர் எடுத்த உறுதிமொழியை மீறியுள்ளார். எனவே, எந்த அடிப்படையில் கவர்னராக பதவி வகிக்கிறார் என்பதற்கு, அவரிடம் விளக்கம் கோர வேண்டும்.
இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.