சென்னை:ஆவின் பால் பாக்கெட்டில், பழைய விலை அச்சடித்து விற்கப்படுவதால், பாலகங்களில் நுகர்வோர் கடும் வாக்குவாதத்தில் ஈடுபடும் நிலை ஏற்பட்டுள்ளது.
சிவப்பு நிற பால் பாக்கெட், 30 ரூபாயில் இருந்து, 34 ரூபாய்; ஆரஞ்ச் நிற பால் பாக்கெட், 24 ரூபாயில் இருந்து 30 ரூபாயாகவும், கடந்த 5ம் தேதி விலை உயர்த்தப்பட்டது.
ஆனால், 25 நாட்களுக்கு மேலாகியும், ஆரஞ்ச் மற்றும் சிவப்பு நிற பால் பாக்கெட்டுகளில், பழைய விலைதான் அச்சடித்து விற்பனைக்கு வருகிறது.
புதிய விலை மற்றும் உற்பத்தி தேதி சிறிதாக அச்சிடப்பட்டுள்ளது.
இதனால், பால் வாங்கும் பொதுமக்கள், அச்சிட்டுள்ள பழைய விலையை விட, ஏன் கூடுதல் தொகை கேட்கின்றனர் எனக் கேட்டு, பாலகங்களில் கடும் வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றனர்.
இந்த குழப்பத்திற்கு ஆவின் நிறுவனம் தீர்வு காண்பது அவசியம்.