சென்னை:சென்னை, கோவை மாநகராட்சி பணிகளுக்கான 'டெண்டர்' வழங்கியதில், முறைகேடுகள் செய்ததாகவும், வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகவும், பதிவு செய்யப்பட்ட வழக்குகளை ரத்து செய்யக் கோரி, முன்னாள் அமைச்சர் வேலுமணி தாக்கல் செய்த மனுக்களின் உத்தரவை, சென்னை உயர் நீதிமன்றம் இன்று பிறப்பிக்கிறது.
சென்னை மற்றும் கோவை மாநகராட்சிகளில் பல்வேறு பணிகளுக்கான டெண்டர் வழங்கியதில், கோடிக்கணக்கில் முறைகேடு நடந்ததாகவும், இதுகுறித்து லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப் பதிவு செய்து விசாரிக்கவும் கோரி, அறப்போர் இயக்கம் மற்றும் தி.மு.க., பிரமுகர் ஆர்.எஸ்.பாரதி, உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
அப்போதைய அமைச்சர் வேலுமணிக்கு எதிராக குற்றம் சாட்டியிருந்தனர்.
இதையடுத்து, ஆரம்பகட்ட விசாரணை நடத்த, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதைத்தொடர்ந்து, விசாரணை நடத்தி, அறிக்கை அளிக்கப்பட்டது.
இதற்கிடையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதை தொடர்ந்து, லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப் பதிவு செய்தது. வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகவும், மற்றொரு வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்குகளை ரத்து செய்யக்கோரி, முன்னாள் அமைச்சர் வேலுமணி, உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்தார். மனுக்கள், நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், டீக்காராமன் அடங்கிய அமர்வில், விசாரணைக்கு வந்தன.
வேலுமணி சார்பில், மூத்த வழக்கறிஞர்கள் ராஜு, சித்தார்த் தவே வாதாடினர். அறப்போர் இயக்கம் சார்பில் வழக்கறிஞர் வி.சுரேஷ், லஞ்ச ஒழிப்புத் துறை சார்பில், தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஹசன் முகமது ஜின்னா வாதாடினர்.
அனைத்து வாதங்களும் முடிந்த நிலையில், இன்று, நீதிபதிகள் உத்தரவு பிறப்பிக்கின்றனர்.