ஜெயலலிதா பாணியில், நடிகர் விஜய்க்கு நெருக்கடிகள் தர, தி.மு.க., தரப்பில் திட்டமிடப்பட்டு உள்ளதாக தெரியவந்துள்ளது.கடந்த 2011 சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க.,வுக்கு ஆதரவாக, விஜய் தந்தை சந்திர சேகர், தனி மேடையில் பிரசாரம் செய்தார்.
'ஜெயலலிதா முதல்வராக, அணில் மாதிரி விஜய் உதவினார்' என்ற, சந்திரசேகரின் பேச்சு, ஜெயலலிதாவுக்கு அதிருப்தி அளித்தது. அதனால், தமிழக அரசியலில் அடுத்த தலைரவாக விஜய் உருவாவதை தடுக்க, அவர் நடித்த தலைவா திரைப்படத்திற்கு நெருக்கடி தரப்பட்டது. படம் ஓடாமல் நஷ்டம் அடைந்தது. அதன்பின் விஜய் 'அடக்கி' வாசித்தார்.கடந்த 2014, 2019ம் ஆண்டுகளில் நடந்த லோக்சபா தேர்தல்களுக்கு முன், பா.ஜ., ஆட்சியை விமர்சிக்கும் வசனங்கள், அவரது படங்களில் இடம்பெற்றன.
கடந்த 2021ம் ஆண்டு சட்டசபை தேர்தலில், பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளதாக கூறி, சைக்கிளில் வந்து ஓட்டு போட்டார். உள்ளாட்சித் தேர்தலில் விஜய் ரசிகர்கள், சில இடங்களில் தனித்து போட்டியிட்டு வெற்றி பெற்றனர். மற்ற இடங்களில் தி.மு.க.,வுக்கு ஆதரவு அளித்தனர்.
தற்போதும் தி.மு.க., அனுதாபிகளாகதான் விஜய் ரசிகர்கள் இருக்கின்றனர். ஆனாலும் அவரது வளர்ச்சி, தி.மு.க., இளைஞரணி செயலர் உதயநிதியை பாதிக்கும் என, தி.மு.க., தரப்பில் கருதப்படுகிறது. அதனால், விஜய்க்கு எதிராக காய் நகர்த்தல்கள் நடக்கின்றன. விஜய் நடித்த வாரிசு படத்தை, உதயநிதி நிறுவனம் வாங்காமல், அஜித் நடித்த துணிவு படத்தை வாங்கி, 65 சதவீதம் தியேட்டர்களில் வெளியிட உள்ளது.
இதை அறிந்ததும், விஜய் மக்கள் இயக்கம் நிர்வாகிகளை சந்தித்து, தனிக் கட்சி துவக்குவது குறித்து, விஜய் ஆலோசித்தார்.
அதுவும் தி.மு.க., வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது. அவர் தனிக் கட்சி துவக்கினால், லோக்சபா தேர்தலில் தி.மு.க., வெற்றி பாதிக்குமா என, உளவுத் துறை வாயிலாக விசாரிக்க உத்தரவிடப்பட்டது. அதில், தி.மு.க., வெற்றி பாதிக்காது என்றே கூறப்பட்டுள்ளது. ஆனாலும், ஜெயலலிதா பாணியில், விஜய் தங்கள் கட்சியின் அனுதாபி இல்லை என்பதை காட்டவும், அவருக்கு நெருக்கடிகள் தரவும் திட்டமிடப்பட்டு உள்ளது. 'வாரிசு' படத்திற்கு எதிராக, விலங்குகள் வதை தடுப்பு சட்டத்தில் 'நோட்டீஸ்' அனுப்பிய விவகாரம்; விஜய் காரில் கறுப்பு நிற 'ஸ்டிக்கர்' ஒட்டப்பட்டதால், 500 ரூபாய் அபராதம் போன்ற நடவடிக்கைள், அதற்கு சான்றாக அமைந்து
உள்ளன. - நமது நிருபர் -