சென்னை : வருமானத்துக்கு அதிகமாக, 5.53 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக, சி.பி.ஐ., பதிவு செய்த வழக்கில், தி.மு.க., - எம்.பி., ஆ.ராஜா உள்ளிட்டோர் நேரில் ஆஜராக சம்மன் அனுப்பும்படி,
எம்.பி., - எம்.எல்.ஏ., க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் உத்தர
விட்டுள்ளது.
தி.மு.க., முன்னாள் மத்திய அமைச்சரும், தற்போதைய நீலகிரி தொகுதி எம்.பி.,யுமான ஆ.ராஜா, வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக, ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ், 2015ல் சி.பி.ஐ., வழக்கு பதிந்தது.
![]()
|
இந்த வழக்கில், ஆ.ராஜா, அவரது மனைவி, மருமகன், 'கோவை ஷெல்டர்ஸ் பிரைவேட் லிமிடெட்' இயக்குனர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட, 17 பேர் வழக்கில் சேர்க்கப்பட்டனர்.
பின், '2 ஜி' வழக்கு விசாரணையின்போது, டில்லி, சென்னை உள்ளிட்ட, 20 இடங்களில், சி.பி.ஐ., சோதனை நடத்தி, பல்வேறு ஆவணங்களை பறிமுதல் செய்தது.
அந்த ஆவணங்களின்படி, 5.53 கோடி ரூபாய் அளவுக்கு, ஆ.ராஜா, கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட ஆறு பேர், வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக, கடந்த மாதம் சி.பி.ஐ., குற்றப் பத்திரிகை தாக்கல் செய்தது. ராஜாவின் நெருங்கிய கூட்டாளியான கிருஷ்ணமூர்த்தி, 'கோவை ஷெல்டர்ஸ் ப்ரமோட்டர்ஸ்' என்ற நிறுவனத்தை, 2007 ஜனவரியில் துவக்கி, பிப்ரவரியில், 4.56 கோடி ரூபாய் ரொக்கமாக பெற்றுள்ளார்.
ஹரியானா மாநிலம், குருகிராமில் உள்ள ரியல் எஸ்டேட் நிறுவனத்திடம் இருந்து, காஞ்சிபுரத்தில் நிலம் வாங்கி கொடுத்ததற்காக, கமிஷனாக அந்த தொகை பெறப்பட்டு உள்ளது.
'கோவை ஷெல்டர்ஸ்' நிறுவனம் கோவையில் விவசாய நிலம் ஒன்றை வாங்கியுள்ளது. இதன் வாயிலாக, ஆ.ராஜாவின் நெருங்கிய உறவினர்கள் இயக்குனர்களாக இருந்த அந்த நிறுவனத்துக்கு, 4.56 கோடி ரூபாய் கொடுத்தது உள்பட, 5.53 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை, ஆ.ராஜா சட்ட விரோதமாக ஈட்டியுள்ளார்.
அவரது அறியப்பட்ட வருமான ஆதாரங்களில் இருந்து, 579 சதவீத அளவுக்கு, இந்த சொத்துக்கள் உள்ளன என, குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுஇருந்தது.
இந்த வழக்கு, சிறப்பு நீதிமன்ற நீதிபதி டி.சிவகுமார் முன், நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, சி.பி.ஐ., தரப்பில் சிறப்பு அரசு வழக்கறிஞர் அலெக்சாண்டர் லெனின் ராஜா ஆஜரானார்.
வழக்கை விசாரணைக்கு ஏற்ற நீதிபதி, குற்றம் சாட்டப்பட்ட தி.மு.க., - எம்.பி., ஆ.ராஜா, கிருஷ்ணமூர்த்தி, நிறுவனங்களுடன் தொடர்புடைய என்.ரமேஷ், விஜய் சடரங்கனி ஆகியோர் நேரில் ஆஜராக, சம்மன் அனுப்ப உத்தரவிட்டு, விசாரணையை ஜன.,10க்கு தள்ளி வைத்தார்.