சென்னை:'தி.மு.க., ஆட்சிக்கு வந்த ஒன்றரை ஆண்டுகளில், ஆசிரியர்களின் கோரிக்கைகளில் ஒரு துரும்பை கூட முதல்வர் செய்யவில்லை' என, ஆசிரியர் சங்கத்தினர் குற்றஞ்சாட்டினர்.
ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும், தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலை பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகத்தினர், ஒன்பது அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, மாநிலம் முழுதும் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
சென்னையில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தை முற்றுகையிட்டு நடந்த ஆர்பாட்டத்தில், தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலை பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக நிறுவன தலைவர் மாயவன் பேசியதாவது:
தி.மு.க., ஆட்சி அமைந்து ஒன்றரை ஆண்டுகளாகிறது. ஆசிரியர்கள் தினமும் ரத்தக்கண்ணீர் வடிக்கின்றனர்.
நீங்கள் எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோது, ஆசிரியர்களுக்கு ஆதரவாக கொடுத்த வாக்குறுதிகளில் ஒன்றையாவது, நீங்கள் நிறைவேற்றி உள்ளீரா; ஒரு துரும்பைக் கூட செய்யவில்லை.
நாங்கள் ஆட்சிக்கு வந்தால், பழைய ஓய்வூதியத் திட்டத்தை உடனே அமல்படுத்துவோம்; ஈட்டிய விடுப்பை சரண்டர் செய்து, ஊதியம் பெறும் உரிமை தருவோம்; கல்வித் தகுதிக்கு ஏற்ப ஊதியம் தருவோம் என்றீர்கள்; ஒன்றும் நடக்கவில்லை.
ஒன்றரை ஆண்டுகளில் ஒன்றும் செய்யாததுபோல, ஐந்தாண்டு கால ஆட்சியிலும், இப்படியே மவுனமாக இருந்து சாதித்து விடலாம் என, தப்புக்கணக்கு போடாதீர்கள்.
உங்களுக்கு மே மாதம் வரை கால அவகாசம் தருகிறோம். அதற்குள் எங்களை அழைத்து பேசி, கோரிக்கைகளை நிறைவேற்றி தர வேண்டும். இல்லாவிட்டால், தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு, ஆசிரியர்களின் போராட்டம், மிக பிரமாண்டமாக வெடிக்கும். அதற்கு முன்னோட்டம்தான் இந்த ஆர்ப்பாட்டம்.
இவ்வாறு அவர் பேசினார்.