சென்னை:அமைச்சரை சந்திக்க நேரம் ஒதுக்க மறுத்த கவர்னர், எதிர்க்கட்சியினரை சந்திக்க மட்டும் நேரம் ஒதுக்குவது, ஆளுங்கட்சியான தி.மு.க.,வினருக்கு கோபத்தை ஏற்படுத்தி உள்ளது.
தமிழக அரசுக்கும், கவர்னருக்கும் இடையே, பல்வேறு விஷயங்களில் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.
இந்த சூழ்நிலையில், 'ஆன்லைன்' சூதாட்டத்தை தடை செய்யும் சட்ட மசோதா, சட்டசபையில் நிறைவேற்றப்பட்டு, கவர்னர் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. அதற்கு இதுவரை கவர்னர் ஒப்புதல் அளிக்கவில்லை. கவர்னர் தரப்பில் சில விளக்கங்கள் கேட்டன. அதற்கு உடனடியாக சட்டத் துறை சார்பில், விளக்கம் அளிக்கப்பட்டது.
இந்த சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க வலியுறுத்துவதற்காக, கவர்னரை சந்திக்க, சட்டத் துறை அமைச்சர் தரப்பில் அனுமதி கோரப்பட்டது. இதுவரை அமைச்சரை சந்திக்க, கவர்னர் நேரம் ஒதுக்கவில்லை.
அதே நேரத்தில், எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி, தன் கட்சி நிர்வாகிகளுடன், கவர்னரை சந்தித்து, தி.மு.க., அரசின் ஊழல் தொடர்பாக, புகார் மனு அளித்தார்.
அதன் தொடர்ச்சியாக, நேற்று தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை சந்தித்து, தி.மு.க., அரசுக்கு எதிராக மனு அளித்தார். எதிர்க்கட்சியினரை சந்திக்கும் கவர்னர், அமைச்சரை சந்திக்க மட்டும் நேரம் ஒதுக்காதது, தி.மு.க., மேலிடத்துக்கு, கடும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது.