பிரதமர் பாதுகாப்பு குளறுபடி: கவர்னரிடம் பா.ஜ., முறையீடு!| Dinamalar

பிரதமர் பாதுகாப்பு குளறுபடி: கவர்னரிடம் பா.ஜ., முறையீடு!

Added : நவ 30, 2022 | |
சென்னை:''சென்னையில் பிரதமர் நரேந்திர மோடிக்கு அளித்த பாதுகாப்பில், தமிழக அரசு பெரிய குளறுபடி செய்துள்ளது. அதற்கு மாநில அரசு பொறுப்பேற்பதுடன், யாரெல்லாம் தவறு செய்தனரோ, அவர்கள் மீது, அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை வலியுறுத்தினார். சென்னை, கிண்டியில் உள்ள ராஜ்பவனில் கவர்னர் ரவியை, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, சந்தித்தார்.

சென்னை:''சென்னையில் பிரதமர் நரேந்திர மோடிக்கு அளித்த பாதுகாப்பில், தமிழக அரசு பெரிய குளறுபடி செய்துள்ளது. அதற்கு மாநில அரசு பொறுப்பேற்பதுடன், யாரெல்லாம் தவறு செய்தனரோ, அவர்கள் மீது, அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை வலியுறுத்தினார்.

சென்னை, கிண்டியில் உள்ள ராஜ்பவனில் கவர்னர் ரவியை, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, சந்தித்தார்.


'மெட்டல் டிடெக்டர்'கள்அப்போது, பிரதமர் மோடி, ஜூலையில் சென்னை வந்தபோது, தி.மு.க., அரசின் பாதுகாப்பு குளறுபடிகள், மத்திய அரசு திட்டங்களில் முறைகேடுகள் குறித்த மனுவை, கவர்னரிடம் அண்ணாமலை அளித்தார்.

இச்சந்திப்பின் போது, தமிழக பா.ஜ., துணை தலைவர்கள் சக்கரவர்த்தி, கே.பி.ராமலிங்கம், கரு.நாகராஜன், டால்பின் ஸ்ரீதர் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

பின், அண்ணாமலை அளித்த பேட்டி:

கவர்னர் ரவியை சந்தித்து, பா.ஜ., சார்பில் இரு முக்கியமான விஷயங்கள் கோரிக்கையாக வழங்கப்பட்டன.

பிரதமர் நரேந்திர மோடி, 'செஸ் ஒலிம்பியாட்' போட்டிக்காக, ஜூலை 29ல் சென்னை வந்தார்.

அவருக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டிய மாநில அரசு, தன் பணியில் இருந்து தவறி இருக்கிறது என்ற குற்றச்சாட்டை, ஆதாரத்துடன் வழங்கி இருக்கிறோம்.

சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கிற்கு, 150 நாடுகளில் இருந்து வீரர்கள் வந்தனர். அப்போது, பிரதமரின் பாதுகாப்பிற்கு முக்கியமாக இருக்கக் கூடிய, 'மெட்டல் டிடெக்டர்'கள் அதிகமான அளவில் வேலை செய்யவில்லை.


நடவடிக்கைகுறிப்பாக, கைகளால் இயக்கக் கூடிய மெட்டல் டிடெக்டர்கள், நுழைவு வாயிலில் அமைக்கப்பட்ட டிடெக்டர்கள் என, அனைத்தும் சரியாக வேலை செய்யவில்லை.

அவை பழுதடைந்து, சரியான பராமரிப்பு இன்றி இருந்ததை, காவல் துறை பயன்படுத்தியுள்ளது.

பிரதமர் மோடி சென்ற பின், மத்திய அரசின் ஏஜன்சி, 'நீங்கள் வைத்திருந்ததில் நிறைய மெட்டல் டிடெக்டர்கள் சரியாக வேலை செய்யவில்லை; உடனே நடவடிக்கை எடுக்கவும்' என, மாநில அரசுக்கு அறிவுறுத்தியுள்ளது.

பிரதமர் வரும்போது, அதில் மாநில அரசு இவ்வளவு பெரிய குளறுபடி செய்துள்ளது. இந்த அரசு எப்படி சாமானிய மக்களுக்கு பாதுகாப்பு அளிக்கும்? இந்த தவறுக்கு, உளவு துறைதான் காரணம்.

ஆனால், உளவுத் துறை, சில எஸ்.பி.,க்களுக்கு, 'நீங்கள் தான் காரணம்' என, கடிதம் எழுதியுள்ளது. இதற்கு மாநில அரசு பொறுப்பேற்க வேண்டும்.

யாரெல்லாம் தவறு செய்தனரோ, அவர்கள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். தனிக்குழு அமைத்து, கோவில் உள்ளிட்ட முக்கிய இடங்களில் உள்ள அனைத்து மெட்டல் டிடெக்டர்களும் சரியாக வேலை செய்கிறதா என்பதை ஆய்வு செய்யுமாறு, கவர்னரிடம் வலியுறுத்தப்பட்டது.


குடிநீர் இணைப்புஒரு பக்கம், கோவையில் தற்கொலை படை தாக்குதல் முயற்சியும், 19 இடங்களில் பி.எப்.ஐ., எனும் பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா அமைப்பினரின் தாக்குதலும் நடந்துள்ளன. மற்றொரு பக்கம், உள்துறை துாங்குகிறது.

பிரதமர் மோடியின் கனவு திட்டமான, அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் வசதி ஏற்படுத்தி தரும் திட்டத்திற்கு, மத்திய அரசு, 100 சதவீத நிதியை மாநில அரசுக்கு தருகிறது.

தமிழகத்தில் 69 லட்சம் குடிநீர் இணைப்புகளை, மத்திய அரசு, மாநிலம் வாயிலாக வழங்கியுள்ளது.

அத்திட்டத்தில் திருநெல்வேலி, விழுப்புரம் என, மாநிலம் முழுதும் ஏகப்பட்ட முறைகேடுகள் நடந்துள்ளன. குறிப்பாக, 'பைப்' மட்டும் போடப்பட்டுள்ளது; இணைப்பு இல்லை. அதில் தண்ணீர் வராது. பல இடங்களில் நுாற்றுக்கணக்கான கோடி ரூபாயை, மாநில அரசு ஊழல் செய்துள்ளது.

ஆதாரப்பூர்வமாக திருவண்ணாமலை, விழுப்புரம் ஆகிய இரு மாவட்டங்களில் மட்டும், எத்தனை பயனாளிகள், எத்தனை இடங்களில் பைப் இருக்கிறது, இணைப்பு இல்லை என்ற விபரங்கள், கவர்னரிடம் வழங்கப்பட்டு உள்ளன.

பிரதமர் பாதுகாப்பில் உயரதிகாரிகள் மெத்தனமாக இருந்துள்ளனர். அவருக்கு சரியாக பாதுகாப்பு அளிக்காததை ஏற்றுக் கொள்ள முடியாது.

இதுதொடர்பாக, நாங்கள் அளித்த மனு மீது, கவர்னர் நிச்சயம் நடவடிக்கை எடுப்பார்.


மெத்தனப்போக்கு'ஆன்லைன்' சூதாட்டத்தை உடனே தடை செய்ய வேண்டும். அதேசமயம், ஒரு சட்டம் என்பது அரசியல் சட்டத்திற்கு உட்பட்டு இருக்கிறதா என்பதை பார்க்க வேண்டியது கவர்னரின் கடமை.

ஆறு மாதம் எந்த தடையும் இன்றி, ஆன்லைன் சூதாட்டம் நடப்பதற்கு, தி.மு.க., அரசு, அரசாணை வெளியிடாததே காரணம்.

பொத்தாம் பொதுவாக கவர்னரை குறை கூறுவதை ஏற்க முடியாது. காவல் துறையில் கீழே உள்ள போலீசார் கடுமையாக பணியாற்றுகின்றனர். உயரதிகாரிகளின் மெத்தன போக்கால் தான், பிரச்னைகள் ஏற்படுகின்றன.

நாட்டிற்கு வேலை செய்யக் கூடிய துணை ராணுவ வீரரை கேவலமாக பேசியது குறித்தும், அச்சுறுத்தியது குறித்தும் கவர்னரிடம் தெரிவிக்கப்பட்டது.

இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X