சென்னை:சென்னை, ஸ்டான்லி அரசு மருத்துவமனையில், லிப்டில் சிக்கிய மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் பத்திரமாக மீட்கப்பட்டார்.
சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில், கை அறுவை சிகிச்சை சிறப்பு மேற்படிப்பு துவக்கம் மற்றும் புனரமைக்கப்பட்ட நுாற்றாண்டு நிர்வாக கட்டட அலுவலகம் திறப்பு விழாவில் பங்கேற்க, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் நேற்று மதியம் வந்தார்.
பழுது
நிகழ்ச்சியை துவக்கி வைத்து, 3வது தளத்தில் இருந்து தரைத்தளத்திற்கு செல்ல லிப்டில் ஏறினார்.
அவருடன் ஸ்டான்லி மருத்துவக் கல்லுாரி முதல்வர் பாலாஜி, தி.மு.க., - எம்.பி., கலாநிதி வீராசாமி, எம்.எல்.ஏ., ஐட்ரீம் மூர்த்தி மற்றும் ஸ்டான்லி மருத்துவர்கள் உள்ளிட்ட, 10க்கும் மேற்பட்டோர் ஏறினர்.
அப்போது, 'லிப்ட்' பழுதாகி பாதியில் நின்றது. இதனால் அமைச்சர் மற்றும் அதிகாரிகள் செய்வதறியாது திகைத்து நின்றனர்.
'லிப்ட்' ஆப்பரேட்டர் பழுதை சரிசெய்ய முயன்றார். இருந்த போதும் நேரமானதால், ஊழியர்கள் உயர்ந்த மேஜையை, லிப்ட் அருகில் வைத்து லிப்ட் கதவை திறந்து, அமைச்சர் மற்றும் மருத்துவர்களை மீட்டனர்.
இந்த சம்பவத்திற்கு பின் அமைச்சர் சுப்பிரமணியன் பேசியதாவது:
ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் இதேபோன்று பழுதான, 24 'லிப்ட்'களை உடனடியாக மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதில், 17 தற்போது மாற்றப்பட்டுள்ளன.
பராமரிக்கப்படுகிறதா?
அதேபோல், ஸ்டான்லி மருத்துவமனையில் பழுதடைந்த லிப்டுகளை மாற்றி, புதிதாக அமைக்கப்படும். லிப்ட் பராமரிக்கப்படுகிறதா என்பதும் தொடர்ச்சியாக கண்காணிக்கப்படும்.
தமிழகத்தில் மேலும் புதிதாக ஆறு மருத்துவ கல்லுாரிகள் அமைப்பது தொடர்பாக, மத்திய அமைச்சரை சந்திக்க நேரம் கேட்டுள்ளோம். குஜராத் தேர்தல் முடிந்ததும் நேரம் அளிப்பர் என, எதிர்பார்க்கிறோம்.
இவ்வாறு அவர் பேசினார்.
Advertisement