சென்னை:முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் 117 ஏக்கர் நிலம் மற்றும் வங்கி கணக்குகளை முடக்கம் செய்ததை எதிர்த்து தாக்கல் செய்த மனுவுக்கு, வருமான வரித் துறை பதிலளிக்க, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுஉள்ளது.
ஜெயலலிதா மறைவுக்குப் பின், அவர் எம்.எல்.ஏ.,வாக இருந்த சென்னை ஆர்.கே.நகர் தொகுதிக்கு, இடைத்தேர்தல் நடந்தது. அப்போது, வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா செய்ய, அப்போதைய அமைச்சர்கள் முயற்சித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
பறிமுதல்
இதையடுத்து, அப்போதைய சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில், வருமான வரித் துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தி, பல ஆவணங்களை பறிமுதல் செய்தனர்.
அதில், பணப் பட்டுவாடா தொடர்பாக, அமைச்சர்களிடம் எவ்வளவு பணம் வழங்கப்பட்டது என்ற துண்டுச்சீட்டு கிடைத்தது.
அதன் அடிப்படையில், விஜயபாஸ்கரின் 2011- - -12 நிதியாண்டு முதல், 2018 - 19 நிதியாண்டு வரையிலான வருமானம் கணக்கிடப்பட்டது. இதையடுத்து, விஜயபாஸ்கர் 206.46 கோடி ரூபாய் வரி செலுத்த உத்தரவிட்டப்பட்டது.
இந்த தொகைக்காக, அவருக்கு சொந்தமான 117.46 ஏக்கர் நிலம், அவரது மூன்று வங்கிக் கணக்குகள், வருமான வரித் துறையால் முடக்கப்பட்டன. இதை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில் விஜயபாஸ்கர் வழக்கு தொடர்ந்தார்.
அந்த மனு விபரம்:
வருமான வரி அதிகாரிகள் அவசர கதியில் வருமானத்தை கணக்கிட்டு, 206.46 கோடி ரூபாய் வரி செலுத்த உத்தரவிட்டுள்ளனர்.
புதுக்கோட்டையில் 117.46 ஏக்கர் நிலம், 2005ல் வாங்கியது.
அதிகாரிகளால் முடக்கப்பட்ட அந்த நிலத்தில், 'ராசி புளூமெட்டல்' என்ற குவாரி நடத்தி வருகிறேன்.
நில முடக்கத்தால், குவாரி உரிமத்தை புதுபிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
தள்ளி வைப்பு
மேலும், புதுக்கோட்டை வங்கிகளில் உள்ள மூன்று கணக்குகளையும், சென்னை ஓமந்துாரார் அரசினர் வளாகத்தில் உள்ளஇந்தியன் வங்கிக் கணக்கையும், செப்., 29ல் முடக்கியுள்ளனர்.
இந்தியன் வங்கிக் கணக்கில்தான் விராலிமலை தொகுதி எம்.எல்.ஏ.,வான எனக்கு ஊதியமும், தொகுதி மேம்பாட்டு நிதியும் செலுத்தப்படுகிறது.
இந்த கணக்கை முடக்கம் செய்ததால், தொகுதி வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள முடியவில்லை.
எனவே, சொத்தையும், வங்கிக் கணக்கையும் முடக்கம் செய்து, வருமான வரித் துறை பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்.
அந்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி அனிதா சுமந்த், வருமான வரி வசூல் அதிகாரி, துணை கமிஷனர். டிச., 1க்குள் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை தள்ளி வைத்தார்.