சென்னை:கல்லுாரியில் 'ராகிங்' தடுக்க 24 மணி நேர பாதுகாப்பு, கூடுதல் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு இருப்பதாக, சி.எம்.சி., தரப்பில் அளித்த அறிக்கையை ஏற்று, வழக்கு விசாரணையை, சென்னை உயர் நீதிமன்றம் முடித்து வைத்தது.
சி.எம்.சி., எனப்படும் கிறிஸ்துவ மருத்துவக் கல்லுாரி, வேலுாரில் உள்ளது. இந்த மருத்துவக் கல்லுாரியின் முதலாம் ஆண்டு மாணவர்களை, இறுதியாண்டு மாணவர்கள் ராகிங் செய்ததாக, வீடியோ வெளியானது. மாணவர்களை அரைகுறை ஆடையுடன் ஓட விட்டு, ராகிங் செய்தனர்.
சம்பவம் தொடர்பாக, பாகாயம் போலீசில், கல்லுாரி முதல்வர் புகார் அளித்தார். ராகிங் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இறுதியாண்டு படிக்கும் ஏழு மாணவர்கள், கல்லுாரியில் இருந்து 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டனர்.
ராகிங் சம்பவம் தொடர்பாக, பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா, நீதிபதி கிருஷ்ணகுமார் அடங்கிய முதல் பெஞ்ச், வழக்கை விசாரணைக்கு எடுத்தது. ராகிங் தடுக்க எடுத்த நடவடிக்கைகள் தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்யும்படி, சி.எம்.சி.,க்கு உத்தரவிட்டுஇருந்தது.
வழக்கு நேற்று விசாரணைக்கு வந்த போது, கல்லுாரி விடுதி மற்றும் நுாலகங்களில் 24 மணி நேர பாதுகாப்பு மற்றும் கூடுதல் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, தொடர் கண்காணிப்பு நடப்பதாக, சி.எம்.சி., தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
விடுதி வார்டன் உள்ளிட்டோருக்கு 'மெமோ' வழங்கப்பட்டு, விசாரணை துவங்கி இருப்பதாகவும், முதலாம் ஆண்டு மாணவர்கள், தங்கள் குறைகளை தெரிவிக்க, ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு இருப்பதாகவும் கூறப்பட்டது.
இதை பதிவு செய்த முதல் பெஞ்ச், எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் பார்த்துக் கொள்ளும்படி அறிவுறுத்தி, வழக்கு விசாரணையை முடித்து வைத்தது.