கோவை:தமிழக சட்டசபை பொது நிறுவனங்கள் குழு கோவையில் கள ஆய்வு செய்த நிலையில் உறுப்பினர்களில், 10 எம்.எல்.ஏ.,க்கள் வரவில்லை.
தமிழக சட்டசபை பொது நிறுவனங்கள் குழுவில், தலைவர் எஸ்.ஆர்.ராஜா மற்றும் 17 உறுப்பினர்கள் என, 18 பேர் இருக்கின்றனர்.
இக்குழுவினர், கோவையில் ஆய்வு செய்த நிலையில், தலைவர் உட்பட எட்டு பேர் மட்டுமே வந்திருந்தனர்.
டி.ஆர்.பி.ராஜா, செல்வப் பெருந்தகை, ரூபி மனோகரன் என, 10 எம்.எல்.ஏ.,க்கள் வரவில்லை. இருப்பினும், திட்டமிட்டபடி கள ஆய்வில் ஈடுபட்டனர்.
சுங்கம் சந்திப்பு அரசு போக்குவரத்து கழக பணிமனையில், பஸ்கள் பராமரிப்பு குறித்து பணியாளர்கள், அதிகாரிகளிடம் இக்குழுவினர் கேட்டறிந்தனர்.
பஸ் நிறுத்தும் 'ரேம்ப்' சிதிலமடைந்திருந்ததை பார்த்த குழுவினர், 'இதை சீரமைத்திருக்கலாம்; துருப்பிடித்திருக்கும் இரும்பு கம்பிகளுக்கு பெயின்ட் பூசி இருக்கலாம்' என்று கூறினர்.
பணிமனை கழிவு நீர், அருகே உள்ள வாலாங்குளத்தில் கலப்பதை, அதிகாரிகள் மறைத்து விட்டனர். தொடர்ந்து, மாநகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள உக்கடம் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம், சிட்கோ தொழிற்பேட்டை, காற்றாலை நிலையம் மற்றும் பால் உற்பத்தி நிலையங்களை ஆய்வு செய்தனர்.
தவறான தகவல்
குழு தலைவர் ராஜா நிருபர்களிடம் கூறியதாவது:
ஆதிதிராவிடர் நலத்துறை, மின் வாரியம் மற்றும் சுற்றுச்சூழல் தொடர்பாக ஆய்வு மேற்கொள்கிறோம். தணிக்கைத்துறை அறிக்கை தொடர்பாக விளக்கம் கேட்டு, அரசுக்கு தெரிவிக்கப்படும்.
'டைடல் பார்க்' தொழிலாளர்கள் நிலைமை, வளர்ச்சி, தேவையான நிதி தொடர்பாக கேட்டறிந்தோம். அரசு போக்குவரத்து கழக பணிமனையில் போதுமான வசதி இருக்கிறதா என ஆய்வு செய்திருக்கிறோம்.
சமூக வலைதளங்களில் வரும் தகவல்களில், 99 சதவீதம் தவறானதாகவே இருக்கிறது. 'யு டியூப்' சேனல்களில் 'டூப்ளிகேட்' வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.