ஆமதாபாத், குஜராத் சட்டசபைக்கு முதல் கட்டமாக நடக்கும் 89 தொகுதிகளுக்கான தேர்தல் பிரசாரம் நேற்றுடன் ஓய்ந்தது. நாளை ஓட்டுப் பதிவு நடக்கிறது. இதில், 788 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். கடைசி நாளான நேற்று அரசியல் கட்சிகளின் தலைவர்கள் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டனர்.
குஜராத்தில், முதல்வர் பூபேந்திர படேல் தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு மொத்தம், 182 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இதில், 89 தொகுதிகளுக்கான தேர்தல் நாளையும், மீதமுள்ள 93 தொகுதிகளுக்கான தேர்தல், 5ம் தேதியும் நடக்கின்றன.
இதில் முதல் கட்ட தேர்தல் நடக்கும் தொகுதிகளில் நேற்றுடன் பிரசாரம் ஓய்ந்தது. இந்த தேர்தலில் ஆளும் பா.ஜ., மற்றும் காங்கிரஸ், ஆம் ஆத்மி என, மும்முனை போட்டி நிலவுகிறது.
முதல் கட்ட தேர்தல், 19 மாவட்டங்களில் உள்ள 89 தொகுதிகளில் நடக்கிறது. இதில், 788 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இவர்களில், 70 பேர் பெண்கள்.
இந்த தேர்தலுக்காக 25 ஆயிரத்து 434 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், 2.39 கோடி வாக்காளர்கள் ஓட்டளிக்க தகுதி பெற்றுள்ளனர்.
தேர்தல் பணிகளுக்காக இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
பா.ஜ., வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரதமர் மோடி, கடந்த 27, 28 ஆகிய தேதிகளில் பல்வேறு இடங்களில் பிரசாரம் செய்தார்.
பிரசாரத்தின் கடைசி நாளான நேற்று மத்திய அமைச்சர் உள்துறை அமைச்சர் அமித் ஷா, பா.ஜ., தேசிய தலைவர் நட்டா, உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோர், பா.ஜ., வேட்பாளர்களுக்கு ஆதரவாக அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டனர்.
ஆம் ஆத்மி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் பல இடங்களில் பிரசாரம் செய்தார். காங்கிரஸ் வேட்பாளர்களுக்காக உள்ளூர் நிர்வாகிகள் பிரசாரம் செய்தனர். காங்., தலைவர் மல்லிகார்ஜுன கார்கே சமீபத்தில் பிரசாரம் செய்தார்.
ஓட்டு எண்ணிக்கை வரும் 8ம் தேதி நடக்கிறது. அன்று மாலையே குஜராத்தில் ஆட்சி அமைப்பது யார் என தெரிந்து விடும்.
குஜராத்தில் சமீபத்தில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேசுகையில், 'இலங்கையை ஆண்ட ராவணன் போல், பிரதமர் மோடிக்கு 100 தலைகளா உள்ளன' என்றார். இதற்கு பா.ஜ., தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். பா.ஜ., செய்தி தொடர்பாளர் சம்பித் பத்ரா நேற்று கூறியதாவது:பிரதமரை, ராவணனுடன் ஒப்பிட்டு பேசியுள்ள கார்கேயின் செயல் கண்டனத்துக்குரியது. இதன் வாயிலாக, கார்கே குஜராத்மக்கள் ஒவ்வொருவரையும் அவமதித்துள்ளார். சோனியாவும், ராகுலும் பிரதமர் மோடியை இதுபோல பலமுறை அவதுாறாக பேசியுள்ளனர். தற்போது அவர்கள் குரலைத் தான் கார்கே எதிரொலித்துள்ளார். இது காங்கிரசாரின் மனநிலையை காட்டுகிறது. பிரதமர் மோடி, பல்வேறு நாடுகளின் தலைவர்களால் அங்கீகரிக்கப்பட்ட சர்வதேச தலைவர் என்பதை காங்கிரசார் மறந்து விட்டனர். வரும் சட்டசபை தேர்தலில் காங்கிரசாருக்கு குஜராத் மக்கள் ஓட்டுச் சீட்டின் வாயிலாக தகுந்த பாடம் புகட்டுவர். இவ்வாறு அவர் கூறினார்.
தலைநகர் டில்லியை தொடர்ந்து பஞ்சாபிலும் ஆட்சியை கைப்பற்றியுள்ள ஆம் ஆத்மி, குஜராத்தில் செய்யும் தீவிர பிரசாரம் மற்றும் அக்கட்சியின் தேர்தல் வாக்குறுதிகள், பா.ஜ.,மற்றும் காங்., கட்சிகளுக்கு சற்று கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இது, யாருடைய ஓட்டுகளை பிரிக்கும் என்பதை அறிய முடியாததால், பா.ஜ., உஷாராகியுள்ளது.இதையடுத்து, பா.ஜ., தலைவர்கள் பல்வேறு வியூகங்களை வகுத்துள்ளனர். புதுடில்லி மாநகராட்சி தேர்தலை பயன்படுத்தி, குஜராத் சட்டசபை தேர்தல் பிரசார களத்தில் ஆம் ஆத்மியை ஸ்தம்பிக்க செய்ய அவர்கள் திட்டமிட்டுள்ளனர். இதன்படி, டில்லி மாநகராட்சி தேர்தல் பிரசாரத்தில் பா.ஜ.,வின் பெருந்தலைகள் களம் இறங்கியுள்ளனர். பா.ஜ., தேசிய தலைவர் நட்டா, உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத், உள்ளிட்ட பா.ஜ., ஆளும் மாநில முதல்வர்கள் புதுடில்லியில் வீதிவீதியாக பிரசாரம் செய்கின்றனர்.இப்படி பா.ஜ., தலைவர்கள் ஒட்டு மொத்தமாக புதுடில்லி மாநகராட்சி தேர்தலில் களம் இறங்கியிருப்பதால், ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளார். ஆம் ஆத்மியைப் பொறுத்தவரை, டில்லி மாநில அரசியல் தான் அதன் தலைமை பீடம். இதை வைத்துதான், அடுத்தடுத்த வெற்றிகளை அடைந்தது. எனவே, எக்காரணம் கொண்டும் டில்லியில் உள்ள செல்வாக்கை இழக்க ஆம் ஆத்மி தயாராக இல்லை. இதையடுத்து, குஜராத்துக்கு அடிக்கடி செல்வதை குறைத்துக் கொண்ட கெஜ்ரிவால், டில்லியில் கூடுதல் கவனம் செலுத்த துவங்கி விட்டார். இது, பா.ஜ.,வின் வியூகத்துக்கு கிடைத்த வெற்றி என அரசியல் வல்லுனர்கள் கூறுகின்றனர்.