சிவகாசி:புதிய கட்டடத்திற்கு வரி நிர்ணயம் செய்வதற்கும், பெயர் மாற்றம் செய்வதற்கும் ஏழு மாதங்களாக இழுத்தடித்ததால், அதிகாரிகளுக்கு லஞ்சம்கொடுப்பதற்காக தி.மு.க., கவுன்சிலர் பணத்துடன், சிவகாசி மாநகராட்சி கூட்டத்திற்கு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
விருதுநகர் மாவட்டம், சிவகாசி மாநகராட்சி கூட்டம் நடந்தது.
இதில் பங்கேற்ற 5வது வார்டு தி.மு.க., கவுன்சிலர் இந்திராதேவி பேசியதாவது:
புதிய கட்டடத்திற்கு வரி நிர்ணயம் செய்வதற்கும், பெயர் மாற்றம் செய்வதற்கும் விண்ணப்பித்த, 11 பேருக்கு ஏழு மாதங்களாகியும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
ஆனால், அதற்கு பின் விண்ணப்பித்தவர்களிடம் லஞ்சம் பெற்றுக் கொண்டு அனுமதி வழங்கி உள்ளனர். என் வார்டில் மனு கொடுத்த, 11 பேருக்கும் தலா, 10 ஆயிரம் ரூபாய் வீதம், 1.10 லட்சம் ரூபாய் கொண்டு வந்துள்ளேன்.
இந்த லஞ்ச பணத்தை வாங்கிக் கொண்டு, அதிகாரிகள் அனைவரும் பங்கு போட்டு, அனுமதி வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
அதிர்ச்சியடைந்த மேயர் சங்கீதா, ''மனுக்கள் மீது அதிகாரிகள் குறிப்பிட்ட காலத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறு செய்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.
அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுப்பதற்காக, தி.மு.க., கவுன்சிலரே பணத்துடன், மாநகராட்சி கூட்டத்திற்கு வந்தது அதிகாரிகள் உட்பட அனைவரையும் அதிர்ச்சியடைய செய்தது.