போத்தனூர்;கிரைண்டர் கல்லால் கொலை செய்யப்பட்ட கூலித்தொழிலாளி, தினமும் மது குடித்து விட்டு வந்து மனைவி, குழந்தையை சித்ரவதை செய்ததும், சித்ரவதை தாங்காமல்தான், கொலை செய்யும் முடிவை மனைவி எடுத்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
சுந்தராபுரம் அடுத்து பிள்ளையார்புரத்தில் வசித்து வந்தவர் ரங்கன், 36; கூலி தொழிலாளி. இவரது மனைவி கோகிலேஸ்வரி, 31. கடந்த இரு நாட்களுக்கு முன், குடிபோதையில் தூங்கிக்கொண்டிருந்த ரங்கனின் தலையில் கிரைண்டர் கல்லை போட்டு, கோகிலேஸ்வரி கொலை செய்தார். போத்தனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து, கோகிலேஸ்வரியை கைது செய்தனர். விசாரணையில், இருவரும் காதலித்து திருமணம் செய்துள்ளனர்.
மது போதைக்கு அடிமையான ரங்கன் தினமும் குடித்துவிட்டு வந்து கோகிலேஸ்வரியை சித்ரவதை செய்துள்ளார். ஏழு வயதுள்ள பெண் குழந்தையையும் அடித்து துன்புறுத்தியுள்ளார். சம்பவத்தன்றும் போதையில் துன்புறுத்திய பின், படுத்து விட்டார். மனவேதனையிலிருந்த கோகிலேஸ்வரி. சித்ரவதையிலிருந்து தப்பிக்க, கணவரை கொலை செய்யும் முடிவுக்கு வந்துள்ளார்.