மதுரை:போலி ஆவணம் வாயிலாக உயர் நீதிமன்றத்தில் சாதகமான உத்தரவு பெற்றதாக நடிகர் தனுஷுக்கு எதிராக தாக்கலான வழக்கில், கீழமை நீதிமன்ற ஆவணங்களை தாக்கல் செய்ய, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரை மாவட்டம், மேலுார் கதிரேசன், 'நடிகர்தனுஷ் என் மகன். அவர் எனக்கு பராமரிப்புத் தொகை வழங்க உத்தரவிட வேண்டும்' என, மேலுார் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
அதை எதிர்த்து தனுஷ் மனு செய்தார். உயர் நீதிமன்ற கிளை, மேலுார் நீதிமன்ற வழக்கை ரத்து செய்தது.
இதையடுத்து, கதிரேசன், 'தனுஷ் போலி ஆவணங்கள் தாக்கல் செய்து உயர் நீதிமன்றத்தில் அவருக்கு சாதகமாக உத்தரவு பெற்று விட்டார்.
'அவருக்கு எதிராக மதுரை புதுார் போலீசில் புகார் அளித்துள்ளேன். தனுஷ் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு உத்தரவிட வேண்டும்' என, மதுரை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் மனு செய்தார்.
அந்த நீதிமன்றமும் மனுவை தள்ளுபடி செய்தது. அந்த உத்தரவை தள்ளுபடி செய்யக் கோரி, உயர் நீதிமன்றக் கிளையில் கதிரேசன் மனு செய்தார்.
அதை விசாரித்த நீதிபதி ஜி.இளங்கோவன், ''வழக்கு ஆவணங்களை மதுரை கீழமை நீதிமன்றத்திலிருந்து பெற்று, இங்கு தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற பதிவுத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். விசாரணை டிச., 13க்கு ஒத்தி வைக்கப்படுகிறது,'' என, நேற்று உத்தரவிட்டார்.