ஈரோடு:வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில், ஈரோடு மின் வாரிய தலைமை பொறியாளர், அவரது மனைவிக்கு ஐந்து ஆண்டு சிறை, தலா, 50 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து, ஈரோடு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
ஈரோடு மின் வாரியத்தில் முதன்மை பொறியாளராக நடேசன், 67, என்பவர், 1996 முதல், 2008 வரை பணியாற்றினார். வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக எழுந்த புகாரில், 2008ல் லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரது வீட்டில் சோதனை நடத்தினர்.
அவரது பெயரிலும், தனியார் கல்லுாரி பேராசிரியரான அவரது மனைவி மல்லிகா, 65, பெயரிலும், 2.06 கோடி ரூபாய்க்கு சொத்து சேர்த்தது உறுதியானது.
இருவர் மீதும் ஈரோடு லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். ஈரோடு முதன்மை நீதிமன்றத்தில் விசாரணை நடந்தது.
இறுதி விசாரணை முடிந்து, நீதிபதி சரவணன் நேற்று தீர்ப்பளித்தார்.
அரசு பணியை தவறாக பயன்படுத்தி சொத்து சேர்த்த நடேசன், அவருக்கு உடந்தையாக இருந்த மல்லிகாவுக்கு தலா ஐந்து ஆண்டு சிறை தண்டனை, தலா, 50 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.
நடேசன் மீது, 2008ல் லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப் பதிவு செய்த நிலையில், பணியில் இருந்து, 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார். மீண்டும் பணி வழங்கப்படாத நிலையில், பணியில் இருந்து விடுவிக்கப்படவும் இல்லை.
தற்போது நீதிமன்ற தண்டனையால், நிரந்தர பணி நீக்கம் செய்யப்படுவார். அவருக்கு அரசு பண பயன்கள் கிடைக்காது என, அதிகாரிகள் தெரிவித்தனர். இருவரும் கோவை மத்திய சிறையில்அடைக்கப்பட்டனர்.