கள்ளக்குறிச்சி:கணியாமூர் கலவரத்தில் போலீசார் மீது கல் வீசி தாக்கி பொது சொத்துகளை சேதப்படுத்திய இருவரை போலீசார் கைது செய்தனர்.
சின்னசேலம் அடுத்த கணியாமூர் சக்தி மெட்ரிக் பள்ளியில் கடந்த ஜூலை 17ல் கலவரம் ஏற்பட்டது. அப்போது, போலீசாரை கல்வீசி தாக்கிய கலவரக்காரர்கள், பள்ளிக்குள் நுழைந்து போலீஸ் மற்றும் பள்ளி வாகனங்களை தீ வைத்து கொளுத்தினர். பள்ளியில் இருந்த பொருட்களையும் சூறையாடினர்.
இக்கலவரம் தொடர்பாக சிறப்பு புலனாய்வுக் குழு போலீசார் விசாரிக்கின்றனர். கலவரத்தின் போது வெளியான வீடியோ, புகைப்படம் போன்ற ஆதாரங்களை வைத்து, கலவரத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் தொடர்ந்து கைது செய்கின்றனர்.
அதில் சின்னசேலம் அடுத்த மரவாநத்தம் பகுதியைச் சேர்ந்த லட்சுமணன் மகன் சிவக்குமார், 21; கண்ணன் மகன் சீனிவாசன், 21, ஆகியோர் போலீசார் மீது கல்வீசி தாக்கி, பொது சொத்துகளை சேதப்படுத்தியது தெரிந்தது.
இதையடுத்து இருவரையும் சிறப்பு புலனாய்வுக் குழு போலீசார் கைது செய்து கள்ளக்குறிச்சி கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.