சென்னை:பொது தளங்களில் உள்ள ஆவணங்களின் அடிப்படையிலேயே அமைச்சருக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் கூறப்பட்டதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் பா.ஜ. நிர்வாகி பதில் அளித்துள்ளார்.
தமிழக மின்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை அமைச்சராக பதவி வகிக்கும் செந்தில் பாலாஜியை பா.ஜ. தகவல் தொழில்நுட்பப் பிரிவுத் தலைவர் நிர்மல்குமார் சமூக வலைதளங்களில் விமர்சித்து வருகிறார். மதுபான கொள்முதல் மற்றும் விற்பனை குறித்தும் அமைச்சர் செந்தில் பாலாஜியை விமர்சித்திருந்தார்.
இதையடுத்து தன்னைப் பற்றி அவதுாறு பரப்புவதாகவும் அவ்வாறு அவதுாறாக கருத்து தெரிவிக்க நிர்மல் குமாருக்கு தடை விதிக்கவும் கோரி உயர் நீதிமன்றத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி மனுத் தாக்கல் செய்தார்.
மனுவுக்கு பதில் அளிக்கவும் அவதுாறாக கருத்து தெரிவிக்க தடை விதித்தும் நீதிபதி கார்த்திகேயன் உத்தரவிட்டார்.
தடையை நீக்கக் கோரி நிர்மல்குமார் தாக்கல் செய்த மனு:
தனிப்பட்ட முறையில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக எனக்கு எதுவும் கிடையாது. அவரது கட்டுப்பாட்டில் உள்ள அரசு துறைகளில் நிலவும் முறைகேடுகள் ஊழல் நடவடிக்கைகள் குறித்து பொது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த முயற்சிக்கிறேன்.
ஊழல் நடவடிக்கைகள் உள்ளது என்பதை நம்புவதற்கு பொதுத் தளத்தில் போதிய தகவல்கள் உள்ளன. லஞ்ச ஒழிப்புத் துறை அமலாக்கப்பிரிவு சி.பி.ஐ.க்கு நான் புகார் அளித்துள்ளேன். அதிகாரிகள் முன் ஆஜராகி ஆவணங்களை தாக்கல் செய்துள்ளேன்.
மது விற்பனையில் முறைகேடுகள் நடந்திருப்பதாகவும் அரசுக்கு நிதி இழப்பு உள்ளதாகவும் மாநில நிதி அமைச்சர் ஒரு பேட்டியில் கூறியுள்ளார். அதை வைத்து தான் அக்கவுன்டன்ட் ஜெனரலிடம் புகார் அளித்தேன். அதிகாரிகள் பலரிடம் நான் புகார் அளித்துள்ளேன்.
ஆனால் எந்த புகாரும் அளிக்கவில்லை என அமைச்சர் கூறியிருப்பது தவறானது. எதிர்கட்சி தலைவரும் கவர்னரிடம் புகார் அளித்துள்ளார்.
எனவே பொதுத் தளங்களில் உள்ள ஆவணங்கள் அடிப்படையில் தான் அமைச்சருக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் கூறப்பட்டன. எனக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.