சென்னை:தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் பயங்கரவாத செயல்கள் அதிகரித்து வரும் நிலையில் தேசிய புலனாய்வு முகமையான என்.ஐ.ஏ., இயக்குனர் தின்கர் குப்தா, டி.ஜி.பி., சைலேந்திரபாபுவுடன் ஆலோசனை நடத்தினார்.
கோவை உக்கடம் பகுதியில் கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகே அக்.23ல் ஐ.எஸ்., பயங்கரவாதி ஜமேஷா முபின் 29, கார் குண்டு வெடிப்பை நடத்தி பலியானார். இதுகுறித்து என்.ஐ.ஏ., அதிகாரிகள் விசாரித்து இவரது கூட்டாளிகள் ஆறு பேரை கைது செய்தனர். ஹிந்து கோயில்களை தகர்ப்பது, ஹிந்து அமைப்பு தலைவர்களின் உயிருக்கு குறி வைப்பது என சதி திட்டம் தீட்டப்பட்டு இருந்தது தெரியவந்தது.
இந்நிலையில் கர்நாடக மாநிலம் மங்களூரு பம்ப்வெல் பகுதியில் நவ.19ல் அதே மாநிலத்தைச் சேர்ந்த பயங்கரவாதி முகமது ஷாரிக் 24, ஆட்டோவில் குக்கர் குண்டை வெடிக்கச் செய்தார்.இதில் இவரும் ஆட்டோ ஓட்டுனர் புருஷோத்தம் 60, ஆகியோரும் படுகாயம் அடைந்தனர்.
தொடர் விசாரணையில் முகமது ஷாரிக் கோவை, சேலம் உள்ளிட்ட பகுதிகளில் தங்கி இருந்தது தெரியவந்தது.
ஜமேஷா மற்றும் இவரது கூட்டாளிகள் தமிழக இளைஞர்களை மூளைச்சலவை செய்து கேரளாவில் ஆயுத பயிற்சி பெற்றதையும் என்.ஐ.ஏ., அதிகாரிகள் கண்டுபிடித்தனர். இது தொடர்பாக சந்தேக நபர்களின் வீடுகளில் சோதனை நடத்தி முக்கிய ஆவணங்களை கைப்பற்றினர்.
தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் பயங்கரவாத செயல்கள் அதிகரித்து வரும் நிலையில் என்.ஐ.ஏ., இயக்குனர் தின்கர் குப்தா சென்னை வந்துள்ளார். இவர் பயங்கரவாத செயல்களை முறியடிப்பது தொடர்பாக சென்னையில் டி.ஜி.பி., அலுவலகத்தில் நேற்று ஆலோசனை நடத்தினார்.
இதில் டி.ஜி.பி., சைலேந்திரபாபு மற்றும் உளவுத்துறை, உள்நாட்டு பாதுகாப்பு, 'கியூ' பிரிவு போலீஸ் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.
இதுகுறித்து போலீஸ் உயர் அதிகாரிகள் கூறுகையில், 'தின்கர் குப்தாவின் வருகை பெரும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
கூட்டத்தில் கோவை, மங்களூரு குண்டுவெடிப்புகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. உள்நாட்டு பாதுகாப்பு, பயங்கரவாத செயல்கள் முறியடிப்பு, சந்தேக நபர்கள் விபரங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டன' என்றனர்.