தஞ்சாவூர்:தஞ்சாவூரில் டூவீலரில் சென்ற முதியவரிடம் 8 லட்சம் ரூபாயை வழிப்பறி செய்த மூன்று பேரை போலீசார் தேடுகின்றனர்.
உருளைக்கிழங்கு மொத்த வியாபாரியான வெங்கடாசலத்திடம் திருச்சி மாவட்டம் பெரிய மிளகுபாறையை சேர்ந்த நாகரத்தினம் 65 என்பவர் வேலை பார்க்கிறார்.
திருச்சி தஞ்சை உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று வியாபாரிகளிடம் பணம் வசூல் செய்த நாகரத்தினம் நேற்று முன்தினம் தஞ்சாவூருக்கு வந்தார்.
வியாபாரிகளிடம் வசூல் செய்த 7.94 லட்சம் ரூபாயை பையில் வைத்துக் கொண்டு டூவீலரில் திருச்சிக்கு சென்றுள்ளார்.தஞ்சாவூர் மருத்துவக் கல்லுாரி சாலையில் சென்ற போது பின்னால் டூவீலரில் வந்த மூன்று மர்ம நபர்கள் நாகரத்தினம் பணம் வைத்திருந்த பையை பறித்து தப்பி ஓடி விட்டனர்.
இது குறித்து நாகரத்தினம் கொடுத்த புகார்படி மருத்துவக் கல்லுாரி போலீசார் அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.