சூலுார்:"கல்வி, வேலைவாய்ப்பில், ஐந்து சதவீத உள்ஒதுக்கீடு வழங்க வேண்டும்,"என, தமிழ்நாடு மருத்துவர் சமூக நலச்சங்கம் மற்றும் முடி திருத்துவோர் தொழிலாளர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இச்சங்கத்தின் மாவட்ட பொதுக்குழு, புதிய நிர்வாகிகள் தேர்வு, மாநில பொதுச்செயலாளர் பிறந்த நாள் ஆகிய முப்பெரும் விழா சூலுாரில் நடந்தது. மாநில தலைவர் நடேசன் தலைமைவகித்தார். மாநில பொதுச்செயலாளர் ராஜன் தீர்மானங்களை விளக்கி பேசினார்.
கல்வி வேலைவாய்ப்பில், ஐந்து சதவீத உள் இட ஒதுக்கீடு வழங்கவேண்டும். அரசு கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில், முடி திருத்துவோர், பக்தர்களுக்கு மொட்டை அடித்தல் பணி செய்கின்றனர். அவர்களை அரசு ஊழியர்களாக அறிவித்து சம்பளம் வழங்க வேண்டும்.
ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில், எங்கள் சமுதாய மக்களை பாதுகாக்க, வன்கொடுமை பாதுகாப்பு சட்டம் உள்ளது. அதேபோல், தமிழகத்திலும் சட்டம் கொண்டு வரவேண்டும், என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மாவட்ட தலைவராக சசிக்குமார், மாவட்ட செயலாளராக ஜெயக்குமார், மாவட்ட பொருளாளராக சரவணக்குமார் ஆகியோர் புதிய நிர்வாகிகளாக அறிவிக்கப்பட்டனர்.