பெ.நா.பாளையம்:பெரியநாயக்கன்பாளையம் பேரூராட்சியில் குப்பை அள்ள வாங்கப்பட்ட பேட்டரி வண்டிகள் பயன்பாடு இல்லாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
பெரியநாயக்கன் பாளையம் பேரூராட்சிக்கு உட்பட்ட, 18 வார்டுகளில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் வாயிலாக, குப்பையை சேகரிக்க, ஏழு பேட்டரி வண்டிகள் கடந்த, 10 நாட்களுக்கு முன் கொள்முதல் செய்யப்பட்டன.
சுற்றுப்புற சூழலை பாதுகாக்க பேட்டரி வண்டிகள் வாங்கப்பட்டன. பேட்டரி வண்டிகள் குப்பை எடுக்க பயன்படுத்தப்படாமல், நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. இதனால் தமிழக அரசின் பணம், 14 லட்சம் ரூபாய் வீணாகும் அவலம் ஏற்பட்டுள்ளது.
தரமில்லாத பேட்டரிகள்!
இது குறித்து, பெரியநாயக்கன்பாளையம் பேரூராட்சி அலுவலக வட்டாரத்தினர் கூறுகையில்,' பேட்டரி வண்டிகளில் பெரியநாயக்கன்பாளையம் பேரூராட்சி மற்றும் திடக்கழிவு மேலாண்மை குறித்த தகவல் ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட வேண்டும். அவை, இன்னும் ஒட்டப்படவில்லை.
மேலும், பேட்டரிகள் தரம் குறைந்தவைகளாக உள்ளதால், அதனை மாற்றித் தரும்படி கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இவை செய்து முடிக்கப்பட்டவுடன் குப்பை அள்ள பேட்டரி வண்டிகள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும்,' என்றனர்.