சூலுார்:அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தை செயல்படுத்த, ஊராட்சி தலைவர்கள், செயலர்களுக்கு சூலுாரில் பயிற்சி அளிக்கப்பட்டது.
அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தை செயல்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கு ஊராட்சி வாரியாக கணக்கெடுக்கும் பணியை துவக்கவேண்டும் என, மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
இதையடுத்து, சூலுார் யூனியன் அலுவலகத்தில், கணக்கெடுக்கும் பணி தொடர்பாக பயிற்சி அளிக்கப்பட்டது. ஒன்றிய சேர்மன் பாலசுந்தரம் தலைமைவகித்தார். மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை உதவி திட்ட அலுவலர் ( ஊதியம் மற்றும் வேலை வாய்ப்பு) காசிநாதன் பேசுகையில்," வீடில்லாத ஏழைகளுக்கு இத்திட்டத்தின் கீழ் வீடுகள் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்காக, முறையாக கணக்கெடுக்க வேண்டியது அவசியம். கணக்கெடுப்பின் வாயிலாக உண்மையான நபருக்கு வீடு கிடைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்," என்றார்.
வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சிவகாமி (ரெகுலர்), சதீஷ்குமார் (கிராம ஊராட்சிகள்), துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ரத்தினகுமார் ஆகியோர் கணக்கெடுப்பு பணி குறித்து பயிற்சி அளித்தனர்
மக்கள் பிரதிநிதிகள் பேசுகையில்,' ஒவ்வொரு ஊராட்சியிலும் பலருக்கு வீடு வழங்க வேண்டியுள்ளது. ஒரு வீட்டில் மூன்று குடும்பங்கள் வசிக்கின்றனர். அவர்களில் யாரை தேர்வு செய்வது. திட்டம் எப்போது செயல்படுத்தப்படும். ஒரு ஊராட்சிக்கு எத்தனை வீடுகள் ஒதுக்கீடு செய்யப்படும்,' என, பல்வேறு கேள்விகளை எழுப்பினர்.
கவுன்சிலர்கள் புலம்பல்
பயனாளிகளை தேர்வு செய்யும் குழுவில், ஊராட்சி தலைவர்கள், வார்டு உறுப்பினர்கள், செயலர்கள் உள்ளனர். ஒன்றிய கவுன்சிலர்களுக்கு குழுவில் இடமளிக்கவில்லை. பிறகு எங்களை எதற்கு கூட்டத்துக்கு அழைக்கின்றனர் எனத்தெரியவில்லை, என, கவுன்சிலர்கள் புலம்பினர்.
இக்கூட்டத்தில், உதவி பொறியாளர்கள், மகளிர் சுய உதவிக்குழு கூட்டமைப்பு பிரதிநிதிகள், ஒன்றிய பணி மேற்பார்வையாளர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.