பெ.நா.பாளையம்:பெரியநாயக்கன்பாளையம் அருகே கடந்த ஒரு வாரமாக, கேட்பார் இன்றி ஒரே இடத்தில் நிற்கும் காரால் பீதி ஏற்பட்டுள்ளது.
கோவையில் கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகே நடந்த கார் குண்டு வெடிப்பை தொடர்ந்து, கேட்பார் இன்றி நிற்கும் கார்களை போலீசார் தொடர்ந்து கண்காணித்து, அகற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
பெரியநாயக்கன்பாளையம் ரயில்வே பீடர் ரோடு, தொடக்க வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி அருகே உள்ள காலி இடத்தில் கடந்த ஒரு வாரமாக வெள்ளை நிற டாக்சி ஒன்று கேட்பாரற்று நிற்கிறது. இது யாருடைய கார் என்பது தெரியவில்லை. இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தும் உரிய நடவடிக்கை எடுக்காததால், அப்பகுதி பொதுமக்கள் பீதியில் உள்ளனர்.
காரின் உரிமையாளரை உடனடியாக போலீசார் கண்டுபிடித்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.