அன்னுார்:புள்ளியியல் மற்றும் பொருளியல் துறை சார்பில், அன்னுார் மற்றும் காரமடை வட்டாரத்தைச் சேர்ந்த, வேளாண், தோட்டக்கலை, சுகாதாரம், ஊரக வளர்ச்சித் துறை, கால்நடை பராமரிப்புத்துறை உள்ளிட்ட துறை அலுவலர்களுக்கு, 'நீடித்த நிலையான வளர்ச்சிக்கான இலக்குகள்' குறித்த பயிற்சி வகுப்பு நேற்று அன்னுார் வேளாண்துறை அலுவலகத்தில் நடந்தது.
பயிற்சி வகுப்பில் கோட்ட உதவி இயக்குனர் ஹேமலதா பேசியதாவது :
அனைத்து இடங்களிலும், அனைத்து வகையிலான ஏழ்மையை போக்க ஏழைகள் மற்றும் எளிதில் சுரண்டலுக்கு உள்ளாகும் மக்கள் உட்பட அனைத்து ஆண், பெண்களுக்கு, பொருளாதார வளங்கள், அடிப்படை வசதிகளை பயன்படுத்துதல், நிலத்தின் மீதான உரிமையை வழங்குதல், இயற்கை வளங்கள், உயர்ந்த தொழில்நுட்பம் ஆகியவை கிடைக்க செய்ய வேண்டும்.
பொருளாதார, சமூக, சுற்றுச்சூழல் சீர்கேடுகளால் அவர்களுக்கு ஏற்படும் தாக்கங்களை குறைக்கவேண்டும். பெண்களின் முன்னேற்றத்துக்கான உத்திகளை அடிப்படையாகக் கொண்டு செயல்பட வேண்டும். பாதுகாப்பான ஊட்டச்சத்துள்ள உணவு போதுமான அளவு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். பெண்கள், பழங்குடியினர், கால்நடை மேய்ப்போர், சிறு விவசாயிகள் ஆகியோருக்கு நில பயன்பாட்டுக்கான உரிமையை வழங்குதல் ஆகியவற்றால் ஏழ்மை பாதிப்பை போக்கலாம்.
அனைவருக்கும் சமத்துவமான தரமான கல்வியை உறுதி செய்ய வேண்டும். பாலின சமத்துவம் ஏற்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட, 17 இலக்குகளை அடைய தேவையான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
புள்ளியியல் ஆய்வாளர்கள், 'ஒவ்வொரு மாதமும் புள்ளியல் துறை சார்பில் அனைத்து துறைகளிலும் கேட்கப்படும் விபரங்களை சரியாக வழங்கி ஒத்துழைப்பு தர வேண்டும்,' என அறிவுறுத்தினர்.