கோவை:அரசு மருத்துவமனையில், நோயாளிகள், பார்வையாளர்கள் நடந்து செல்லும் பாதையில் சாக்கடை கழிவுநீர் தேங்குவதை தடுக்க நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கோவை அரசு மருத்துவமனையில் தற்போது கட்டுமானப்பணிகள் நடந்து வருகின்றன. இதன் காரணமாக மருத்துவமனையில் இடநெருக்கடி அதிகரித்துள்ளது. மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதால், இடப்பற்றாக்குறையும் அதிகம் உள்ளது.
இந்நிலையில், மருத்துவமனையின் பழைய நுழைவாயில் அருகே அடிக்கடி சாக்கடை கழிவுநீர் தேங்குகிறது. மருத்துவமனைக்கு வரும், நோயாளிகள், பார்வையாளர்கள் நடந்து செல்வதில் சிரமம் ஏற்படுகிறது. கழிவுநீர் தேங்குவதால் ஏற்படும் துர்நாற்றத்தால் சுகாதார சீர்கேடும் ஏற்படுகிறது.
''மருத்துவமனை நுழைவாயிலில் உள்ள சாக்கடை கால்வாயால்தான் இப்பிரச்னை ஏற்படுகிறது. மாநகராட்சி நிர்வாகத்துக்கு பலமுறை அறிவுறுத்தப்பட்டுள்ளது.
''அவர்களும் அவ்வப்போது வந்து சுத்தம் செய்கின்றனர். நிரந்தர தீர்வு காண மாநகராட்சிக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது,'' என்றார் டீன் நிர்மலா.