சென்னை: நாடு முழுதும் பாதயாத்திரை மேற்கொண்டுள்ள ராகுல், சுதந்திர போராட்ட காலத்தில், ஆங்கிலேயர்களுக்கு ஆதரவாக நடந்து கொண்டதாக, ஆர்.எஸ்.எஸ்., மீது குற்றம்சாட்டி வருகிறார்.
வரும் 2024 லோக்சபா தேர்தலை ஒட்டி, செப்டம்பர் 7-ம் தேதி கன்னியாகுமரியில், 'பாரத் ஜோடோ யாத்திரை' என்ற பெயரில் பாத யாத்திரையை, காங்., - எம்.பி., ராகுல் துவங்கினார். 84-வது நாளாக, மத்திய பிரதேசத்தில் யாத்திரை மேற்கொண்டுள்ளார்.இந்த யாத்திரையின்போது, மத்தியில் ஆளும் பா.ஜ., அரசையும் பிரதமர் மோடியையும், ராகுல் கடுமையாக விமர்சித்து வருகிறார்.
![]()
|
அது மட்டுமல்லாது, செல்லும் இடங்களில் எல்லாம் ஆர்.எஸ்.எஸ்., அமைப்பையும், பா.ஜ., கொண்டாடும் சுதந்திர போராட்ட வீரர் சாவர்க்கரையும் விமர்சித்து வருகிறார்.
'நாடு முழுதும் ஆங்கிலேயர்களுக்கு எதிராக போராட்டங்கள் நடந்தபோது, ஆர்.எஸ்.எஸ்., ஆங்கிலேயர்களை ஆதரித்தது' என, ராகுல் குற்றம்சாட்டி வருகிறார்.
மத்தியப் பிரதேசத்தில் பழங்குடியினர் மத்தியில் பேசிய ராகுல், 'சுதந்திர போராட்ட வீரர்களான தந்தியா மாமா, பிர்சா முண்டாவை துாக்கிலிட்ட ஆங்கிலேயர்களை, ஆர்.எஸ்.எஸ்., ஆதரித்தது' என கூறியுள்ளார்.ராகுல் குற்றம்சாட்டுவது போல, சுதந்திர போராட்டத்தில் ஈடுபடாமல், ஆங்கிலேயர்களுக்கு ஆதரவாக, ஆர்.எஸ்.எஸ்., நடந்து கொண்டதா என்பது குறித்து,அந்த அமைப்பினர் கூறியதாவது:கடந்த 1925-ல் ஆர்.எஸ்.எஸ்., துவங்கப்பட்டது. 1947-ல், இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்தபோது, ஆர்.எஸ்.எஸ்., வயது 22. மகாராஷ்டிரா மாநில காங்கிரசில் முக்கிய பொறுப்பில் இருந்த டாக்டர் ஹெட்கேவார் சிறையில் இருந்தபோது சிந்தித்ததன் விளைவாக உருவானதே, ஆர்.எஸ்.எஸ்., அமைப்பு.
சுதந்திர போராட்டத்தில் பங்கேற்கவில்லை என குற்றம் சாட்டுகின்றனர். ஆனால், சுதந்திர போராட்டத்தின் விளைவாக உருவானதே, ஆர்.எஸ்.எஸ்., அமைப்பு.
பள்ளி மாணவர்களை வைத்து அமைப்பை துவங்கியதால், ஒரு குழந்தை வளர்வதை போலதான் ஆர்.எஸ்.எஸ்., வளர்ந்தது. ஆனாலும், ஆர்.எஸ்.எஸ்., பொறுப்பில் இருந்தவர்கள், சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். நிறுவனரான ஹெட்கேவார், காட்டு சத்தியாகிரக போராட்டத்தில் கலந்து கொண்டு சிறை சென்றார். ஆனாலும், வேண்டுமென்றே ஆர்.எஸ்.எஸ்.,சுக்கு எதிராக ராகுல் அவதுாறு பரப்பி வருகிறார்.
ராகுலின் கொள்ளு தாத்தா நேரு, பாட்டி இந்திரா, தந்தை ராஜிவ், தாய் சோனியா ஆகியோர், ஆர்.எஸ்.எஸ்., மீது இதுபோன்ற குற்றச்சாட்டுகளை கூறினர். ஆனால், அதுவெல்லாம் மக்களிடம் எடுபடவில்லை.
இப்போது, அந்த குடும்பத்திலிருந்து ராகுல் புறப்பட்டிருக்கிறார். ராகுல் இதுபோல பேசுவது, ஒரு வகையில் நல்லது தான். சாவர்க்கரை ராகுல் விமர்சித்தார். இப்போது, இந்திய இளைஞர்கள் சாவர்க்கரை தேடி தேடி படிக்கின்றனர்.அது போல, பாரத் ஜோடோ யாத்திரையில், ஆர்.எஸ்.எஸ்., பற்றியே ராகுல் பேசிக் கொண்டிருப்பதால், ஆர்.எஸ்.எஸ்., பற்றியும், அதன் வரலாறு பற்றியும் பலரும் அறிய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.
ஆனால், காங்கிரஸ் கட்சியினரோ, 'வெறும் தேர்தல் வெற்றிக்காக மட்டுமல்ல, நேருவை போல சித்தாந்த பிடிப்புடன் ராகுல் செயல்பட்டு வருகிறார். 'அதனால்தான், ஆர்.எஸ்.எஸ்.,சை விமர்சித்து வருகிறார். பாரத் ஜோடோ யாத்திரைக்கு கிடைத்து வரும் ஆதரவு, பா.ஜ.,வை கலக்கமடைய செய்துள்ளது' என்கின்றனர்.