உலக, நாடு, தமிழக வாசகர்கள் தினமலர் நாளிதழிற்கு எழுதிய கடிதம்:
என். வைகை வளவன், மதுரையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: ஆண்டு வருமானம், 8 லட்சம் ரூபாய் வரை உள்ள முற்பட்ட வகுப்பினர் பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினர் என்கிறது, மத்திய அரசு. ஆனால், வருமான வரித்துறையோ, ஆண்டுக்கு, 2.50 லட்சம் ரூபாய்க்கு மேல் வருமானம் பெறுபவர்கள், வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய வேண்டும் என்கிறது.
இதனால், 'ஆண்டுக்கு, 8 லட்சம் ரூபாய் வரை வருமானம் பெறுபவர்கள், பொருளாதார அடிப்படையில் ஏழைகள் என்றால், அவர்கள் வருமான வரி செலுத்த வேண்டும் என்ற சட்டத்தை ரத்து செய்ய வேண்டும்' எனக்கோரி, சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் ஒருவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.
'இது, அரசின் கொள்கை முடிவு' என்று கூறி மனுவை தள்ளுபடி செய்யாமல், விசாரணைக்கு ஏற்றுள்ளது நீதிமன்றம். மனு தொடர்பாக, மத்திய அரசு பதிலளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது. இந்தப் பிரச்னை சிக்கலானது தான்; மத்திய அரசின் செயலர்கள் என்ன பதில் சொல்லப் போகின்றனரோ?
இந்த நாட்டில் உண்மையான ஏழைகள் யார் என்பதை அடையாளம் காண்பதில், மத்திய அரசும், மாநில அரசுகளும் பின்பற்றும் அளவுகோல்கள் வித்தியாசமாக இருப்பதால் தான், நீதிமன்றத்தில் இதுபோன்ற வழக்குகள் தாக்கலாகின்றன.
![]()
|
தாழ்த்தப்பட்டவர்கள் முன்னேற இட ஒதுக்கீட்டை அமல் செய்த, முன்னாள் மத்திய சட்ட அமைச்சர் அம்பேத்கர், 'இட ஒதுக்கீடு, 10 ஆண்டு களுக்கு மட்டுமே செல்லும்' என்று சொன்னார்.
ஆனால், நம் அரசியல் வியாபாரிகள், ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள, இட ஒதுக்கீடு கொள்கையை, 70 ஆண்டுகளுக்கும் மேலாக நீட்டித்து குளிர்காய்கின்றனர்.
தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் பிரிவில் ஏழைகளாக இருப்பவர்கள், சேரிகளில் வாழ்ந்து எந்த முன்னேற்றம் அடையாமல், இன்னும் ஏழைகளாகவே இருக்கின்றனர்.
இடஒதுக்கீடு அளித்தால் இவர்கள் முன்னேற்றம் அடைவர் என்று, அம்பேத்கர் கண்ட கனவு, வெறும் பகல் கனவாகவே முடிந்து விட்டது. அரசு கொண்டு வரும் எந்தத் திட்டமும், உண்மையான பயனாளிகளைச் சென்று அடையாததால் வந்த கோளாறு இது.
அதனால், பொருளாதாரத்தில் நலிந்தோருக்கு தற்போது வழங்கப்பட்டுள்ள இட ஒதுக்கீடு உட்பட, பல்வேறு பிரிவினருக்கும் வழங்கப்பட்டுள்ள இட ஒதுக்கீடு, குறிப்பிட்ட ஆண்டுகள் மட்டுமே தொடர வேண்டும் என்ற முடிவை, இனியாவது மத்திய, மாநில அரசுகள் எடுக்க வேண்டும்.
இட ஒதுக்கீடு விஷயத்தில் சில ஆக்கப்பூர்வமான முடிவுகளை எடுத்தால் மட்டுமே, அடுத்தடுத்து சிக்கல்கள் உருவாவதும், முன்னேறிய பிரிவினரே மேலும் மேலும் முன்னேற்றம் அடைவதும் தவிர்க்கப்படும். மத்திய, மாநில அரசுகள் கவனித்தால் நல்லது.