மதுரை: 'தகுதியில்லாதவர்களுக்கு 2021 பிப்., 20ல் வழங்கிய கலைமாமணி விருது திரும்ப பெறப்படும்' என, உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தமிழக அரசு தரப்பு நேற்று தெரிவித்தது.

திருநெல்வேலி, நையாண்டி மேள நாதஸ்வர கலைஞர் சமுத்திரம், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு: என் கலைச் சேவையை பாராட்டி தமிழக அரசு, 2017ல் கலைமாமணி விருது வழங்கியது. தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்ற பொதுக்குழு உறுப்பினராக உள்ளேன். கலைமாமணி விருதுக்கு வயது வரம்பு, தகுதி, வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கவில்லை. இதனால் தகுதியில்லாதவர்கள் விருது பெறுகின்றனர்.
கடந்த, 2019 - 20க்கு கலைமாமணி விருதுக்கு உரியவர்களை தேர்வு செய்ய இயல், இசை, நாடக மன்ற பொதுக்குழு கூட்டம், 2021 பிப்., 15ல் நடந்தது. தகுதியில்லாதவர்களை விருதுக்கு தேர்வு செய்துள்ளதை மறுபரிசீலனை செய்ய வலியுறுத்தினேன். இதை பரிசீலிக்காமல் அவசர கதியில், 2021 பிப்., 20ல் விருது வழங்கும் விழா நடந்தது.
விருது சான்றிதழில் தலைவர், உறுப்பினர் செயலர் கையொப்பம் இல்லை. தகுதியற்றவர்களுக்கு, 2021 பிப்., 20ல் வழங்கிய கலைமாமணி விருதை திரும்பப் பெற வேண்டும். வருங்காலங்களில் சரியான நடைமுறையை பின்பற்றி கலைமாமணி விருது வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு சமுத்திரம் குறிப்பிட்டார்.

மனுவை, நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஜெ.சத்திய நாராயண பிரசாத் அமர்வு விசாரித்தது. தமிழக அரசு தரப்பில், 'தகுதி அடிப்படையில் உண்மையான கலைஞர்களுக்கு விருது வழங்கப்பட்டுள்ளதா என நிபுணர் குழு அமைத்து விசாரிக்கப்படும். தகுதியற்றவர்களுக்கு விருது வழங்கப்பட்டிருந்தால் ரத்து செய்து திரும்ப பெறப்படும்.
'மூத்த கலைஞர்கள், நிபுணர்கள் குழு அமைத்து வழிகாட்டுதல்கள் உருவாக்கி வரும் காலங்களில் தகுதியான கலைஞர்களுக்கு விருது வழங்கப்படும். வெளிப்படைத் தன்மை பின்பற்றப்படும்' என, தெரிவிக்கப்பட்டது. நீதிபதிகள், 'அரசு தரப்பின் நடவடிக்கையை இந்த நீதிமன்றம் பாராட்டுகிறது. தீர்ப்பு ஒத்தி வைக்கப்படுகிறது' என, உத்தரவிட்டனர்.
Advertisement