ஆமதாபாத்: தலைநகர் டில்லியை தொடர்ந்து பஞ்சாபிலும் ஆட்சியை கைப்பற்றியுள்ள ஆம் ஆத்மி, குஜராத்தில் செய்யும் தீவிர பிரசாரம் மற்றும் அக்கட்சியின் தேர்தல் வாக்குறுதிகள், பா.ஜ.,மற்றும் காங்., கட்சிகளுக்கு சற்று கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இது, யாருடைய ஓட்டுகளை பிரிக்கும் என்பதை அறிய முடியாததால், பா.ஜ., உஷாராகியுள்ளது.
இதையடுத்து, பா.ஜ., தலைவர்கள் பல்வேறு வியூகங்களை வகுத்துள்ளனர். புதுடில்லி மாநகராட்சி தேர்தலை பயன்படுத்தி, குஜராத் சட்டசபை தேர்தல் பிரசார களத்தில் ஆம் ஆத்மியை ஸ்தம்பிக்க செய்ய அவர்கள் திட்டமிட்டுள்ளனர். இதன்படி, டில்லி மாநகராட்சி தேர்தல் பிரசாரத்தில் பா.ஜ.,வின் பெருந்தலைகள் களம் இறங்கியுள்ளனர். பா.ஜ., தேசிய தலைவர் நட்டா, உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத், உள்ளிட்ட பா.ஜ., ஆளும் மாநில முதல்வர்கள் புதுடில்லியில் வீதிவீதியாக பிரசாரம் செய்கின்றனர்.

இப்படி பா.ஜ., தலைவர்கள் ஒட்டு மொத்தமாக புதுடில்லி மாநகராட்சி தேர்தலில் களம் இறங்கியிருப்பதால், ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளார். ஆம் ஆத்மியைப் பொறுத்தவரை, டில்லி மாநில அரசியல் தான் அதன் தலைமை பீடம். இதை வைத்துதான், அடுத்தடுத்த வெற்றிகளை அடைந்தது. எனவே, எக்காரணம் கொண்டும் டில்லியில் உள்ள செல்வாக்கை இழக்க ஆம் ஆத்மி தயாராக இல்லை.
இதையடுத்து, குஜராத்துக்கு அடிக்கடி செல்வதை குறைத்துக் கொண்ட கெஜ்ரிவால், டில்லியில் கூடுதல் கவனம் செலுத்த துவங்கி விட்டார். இது, பா.ஜ.,வின் வியூகத்துக்கு கிடைத்த வெற்றி என அரசியல் வல்லுனர்கள் கூறுகின்றனர்.