சென்னை: முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலையாளிகள் விடுவிப்பை எதிர்த்து வரும், ஓய்வு பெற்ற கூடுதல் எஸ்.பி., அனுசுயா டெய்சிக்கு கொலை மிரட்டல் விடுக்கும் மர்ம நபர்கள் குறித்து, போலீசார் விசாரணையை துவக்கி உள்ளனர்.
முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கில் துாக்கு தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன், நளினி உள்ளிட்டோரை, உச்சநீதிமன்றம் சமீபத்தில் விடுவித்தது. இதற்கு, ராஜிவ் கொலையின்போது உயிர் தப்பிய, ஓய்வு பெற்ற கூடுதல் எஸ்.பி., அனுசுயா டெய்சி எதிர்ப்பு தெரிவித்தார்.
அவருக்கு, வெளிநாடுகளில் இருந்து மர்ம நபர்கள் கொலை மிரட்டல் விடுத்து வருகின்றனர். டி.ஜி.பி., சைலேந்திரபாபு உள்ளிட்டோர் பற்றியும் அவதுாறுாக பேசி வருகின்றனர். இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, டி.ஜி.பி., சென்னை கமிஷனர் அலுவலகத்தில், அனுசுயா டெய்சி நேற்று முன்தினம் புகார் அளித்தார்.
இதையடுத்து, அனுசுயா டெய்சியிடம் உளவுத்துறை போலீசார் விசாரித்து, மர்ம நபர்கள், இணைய அழைப்பு வாயிலாக, மிரட்டல் விடுத்து பேசியதற்கான ஆதாரங்கள் மற்றும் அவர்கள் அனுப்பிய, 'வீடியோ'க்களை பெற்றுள்ளனர். அனுசுயா டெய்சியின் வீட்டருகே, 24 மணி நேரமும் போலீஸ் நடமாட்டம் இருக்கும் வகையில் ரோந்து பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

இதுகுறித்து, போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது: அனுசுயா டெய்சிக்கு மிரட்டல் விடுக்கும் நபர்கள் குறித்து விசாரணையை துவக்கி உள்ளோம். இவர்கள், வெளிநாடுகளில் இருந்து பேசுவதாக தெரிவிக்கின்றனர்.
உண்மையிலேயே வெளிநாட்டில் இருந்து தான் பேசுகின்றனரா, தமிழகத்தில் இருந்து எவரேனும் துாண்டி விடுகின்றனரா என்பது குறித்து, விசாரித்து வருகிறோம். அனுசுயா டெய்சிக்கு தக்க பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. அவருக்கு கொலை மிரட்டல் விடுத்தவர்கள் கைது செய்யப்பட்டு, சட்டத்தின் முன் நிறுத்தப்படுவர். இவ்வாறு அவர்கள்கூறினர்.