''மத்திய அரசின் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி ஒருமைப்பாட்டுக்கும், ஒற்றுமைக்கும் எடுத்துக்காட்டாக விளங்குகிறது,'' என, எம்.பி., வாசன் புகழாரம் சூட்டியுள்ளார்.
திருவையாறு தியாகபிரம்ம மஹோத்சவ சபை தலைவரும், எம்.பி.,யுமான வாசன், உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் நேற்று முன்தினம் நடைபெற்ற, காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
அப்போது, வாசன் பேசுகையில்,''வேற்றுமையில் ஒற்றுமை காண்பதே நமது கலாசாரம். இந்த கலாசாரத்தை பேணிக்காப்பது நமது கடமை. இக்கடமையை முன்னிறுத்தி பிரதமர் மோடி, காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியை சிறப்பாக ஏற்பாடு செய்துள்ளார்.

ராமேஸ்வரம்-காசி இடையேயான தொடர்பை புதுப்பிப்பது மட்டுமல்லாமல், நுாற்றுக்கணக்கான ஆண்டுகளாக தொடரும் இந்த உறவை மெருகேற்றி, ஒருமைப்பாட்டுக்கும், ஒற்றுமைக்கும் எடுத்துக்காட்டாய் இந்த நிகழ்வு காசியில் நடைபெறுகிறது. இந்தியாவின் நான்கு திசைகளில் உள்ள மக்களின் சங்கமத்திற்கான விழாவாக இது நடக்கிறது. வாழ்த்துக்கும், பாராட்டுக்கும் உரிய இந்த விழாவுக்காக, தமிழ் மக்கள் சார்பில் நன்றி கூறுகிறேன்,'' என்றார்.
நிகழ்ச்சியில், உத்தரப்பிரதேச அமைச்சர் நித்தின் அகர்வால் உட்பட பலர் பங்கேற்றனர்.
- நமது நிருபர் -