மதுரை: மதுரை 'எய்ம்ஸ்' மருத்துவமனைக்கு ஜப்பானின் ஜைக்கா நிறுவனம், இதுவரை நிதி விடுவிக்கவில்லை என்று தகவல் அறியும் உரிமை சட்டம் (ஆர்.டி.ஐ) மூலமாக கேட்கப்பட்ட கேள்விக்கு மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் பதிலளித்துள்ளது.
மதுரை, தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க, 2019 ஜன.,27ல் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். எய்ம்ஸ் மருத்துவமனையின் திட்ட மதிப்பீடை ரூ.1464 கோடியில் இருந்து, மேலும் உயர்த்தி, மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது. ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமையில் நிதியுதவி பெற திட்டமிட்டு, முழு திட்ட அறிக்கையும் அனுப்பப்பட்டது. இதில், 82 சதவீதம் நிதி வழங்க ஜப்பானின் ஜைக்கா நிறுவனம் ஒப்புதல் வழங்கியது. ஆனால் தற்போது வரை கட்டுமானங்கள் துவங்காமல் தாமதம் ஏற்பட்டுள்ளது.

இதனால் தற்போது மதுரை எய்ம்ஸ் மருத்துவ மாணவர்கள், ராமநாதபுரம் மருத்துவக் கல்லூரியில் தங்கி படிக்கின்றனர். மதுரையில் கட்டடம் கட்டி திறந்தால் மட்டுமே 'எய்ம்ஸ்' மாணவர்களுக்கு, எய்ம்ஸ் தரத்தில் மருத்துவக்கல்வி வழங்க முடியும். இந்நிலையில், மதுரையை சேர்ந்த ஆர்.பாண்டியராஜா என்பவர், மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்திற்கு ஆர்.டி.ஐ மூலமாக எய்ம்ஸ் தொடர்பான சில கேள்விகளை கேட்டுள்ளார். அதற்கு அமைச்சகம் பதில் வழங்கியிருக்கிறது.
அதில், மொத்த திட்ட தொகை ரூ.1977.8 கோடி என்றும், இதில், மொத்த நிதியில் ஜைக்கா 82 சதவீதமும், மத்திய அரசு 18 சதவீதமும் வழங்க உள்ளதாகவும், அதன் அடிப்படையில் ஜைக்கா ரூ.1621.8 கோடி கடன் வழங்க இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளனர். இதுவரை ஜைக்கா நிறுவனம் மதுரை எய்ம்ஸ் நிதியை விடுவிக்கவில்லை என்றும், திருத்தப்பட்ட புதிய திட்ட மதிப்பீடுக்கு மத்திய அரசும், ஜைக்கா நிறுவனமும் ஒப்புதல் வழங்கியிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.