தமிழக காங்., தலைவர் அழகிரி அறிக்கை:
நம் நாட்டில் ஏழு அரசியல் கட்சிகளின் நன்கொடை வருவாய், ௧,398 கோடி ரூபாய்; அதில், பா.ஜ.,வுக்கு மட்டும், ௧,௦38 கோடி ரூபாய் வழங்கப்பட்டு இருக்கிறது. இதில், 989 கோடி ரூபாய் 'கார்ப்பரேட்' நிறுவனங்களின் நன்கொடையாக மட்டுமே பெறப்பட்டுள்ளது. கார்ப்பரேட் நிறுவனங்கள் வழங்கிய மொத்த நன்கொடையில், 73.5 சதவீதம் பா.ஜ.,வுக்கு கிடைத்துள்ளது. தேர்தல் பத்திரங்கள் வாயிலாக நன்கொடை திரட்டுவதை, பா.ஜ., ஆட்சி அதிகாரத்தின் வாயிலாக, தனக்கு சாதகமாக பயன்படுத்தி வருகிறது.
உங்க 'மாஜி' தலைவர் ராகுல், பெரும் படைசூழ நாடு முழுக்க நடந்துட்டு இருக்காரே... அதுக்கான செலவுகளை யார் செய்றாங்க?
மக்கள் நீதி மய்யம் மாநில செயலர் எம்.ஸ்ரீதர் அறிக்கை:
மூன்று நிதி நிறுவனங்கள், 2 லட்சத்துக்கும் மேற்பட்டோரிடம், 9,000 கோடி ரூபாய்க்கு மேல் ஏமாற்றி உள்ளன. இவ்வளவு தொகையை ஒரே நாளில் மோசடி செய்திருக்க முடியாது. மாதம், 10 முதல் 25 சதவீதம் வரை வட்டி தருவோம் என்று வெளியாகும் கவர்ச்சிகரமான அறிவிப்பை நம்பி, பொதுமக்களும் இந்நிறு வனங்களில் முதலீடு செய்கின்றனர். ஆரம்பத்தில் அமைதியாக இருந்துவிட்டு, மோசடி நடந்த பின் நடவடிக்கை மேற்கொள்வதே அரசுக்கும், காவல் துறைக்கும் வாடிக்கையாகி விட்டது.
பொருளாதார குற்றப்பிரிவு போலீசாருக்கும் வேலை தரணும்னு, இந்த மாதிரி மோசடிகளை அரசு கண்டுகொள்ளாமல் இருந்து விடுகிறதோ?
அ.ம.மு.க., பொதுச் செயலர் தினகரன் பேட்டி:

தமிழக மக்கள் நலன் கருதி, அரசு கொண்டு வரும் சட்டங்களை காலம் தாழ்த்தி, காலாவதியாகும் வரை செய்வது கவர்னர் பதவிக்கு அழகல்ல. இதுபோன்ற நிகழ்வுகள் வருங்காலத்தில் ஏற்படாமல், அதை கவர்னர் சரி செய்ய வேண்டும். மக்கள் நலனுக்கான சட்டங்களுக்கு காலம் தாழ்த்தாமல், கவர்னர் உடனுக்குடன் கையெழுத்திடுவது தான் மரபு.
இந்த சட்டம் தொடர்பாக, தமிழக அரசு அனுப்பிய விளக்கத்தை கவர்னர் படிச்சு பார்க்க அவகாசம் தர வேண்டாமா?
தமிழக பா.ஜ., துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி அறிக்கை:

தமிழகத்தில் பிரிவினைவாத தீய சக்திகள், அவ்வப்போது தலை துாக்கியபடி தான் இருக்கின்றன. அதற்கு ஆட்சியாளர்களும் துணை நிற்பது, அவர்களுக்கே சர்வ நாசத்தை உருவாக்கும்.
வாஸ்தவம் தான்... 1989ம் ஆண்டு தி.மு.க., ஆட்சியில் இலங்கை போராளிகளுக்கு அடைக்கலம் தந்து, 1991ல் ஆட்சி கலைக்கப்பட்ட வரலாற்றை மறக்க முடியுமா?
நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பேட்டி:

தமிழகத்தில், 'ஆன்லைன்' சூதாட்ட தடை சட்டம் காலாவதியானது; இதற்கு, கவர்னர் ஒப்புதல் அளிக்கவில்லை. இது தொடர்பான மசோதாவுக்காவது, கவர்னர் ஒப்புதல் அளிப்பார் என எதிர்பார்க்கிறோம். கவர்னர் ஒப்புதல் அளிக்கவில்லை என்றால், அதன்பின், எங்கள் நிலைப்பாடு என்ன என்பது தெரியும். தமிழக கவர்னர் அரசியல் செய்யக்கூடாது.
'ஆன்லைன்' சட்டத்துக்கு ஒப்புதல் தராமல் இருப்பதன் மூலம், கவர்னர் என்ன அரசியல் பண்ணிட முடியும்னு தெரியலையே!