சென்னை: சென்னைக்கு வந்த பிரதமருக்கு அளிக்கப்பட்ட பாதுகாப்பில் குளறுபடி நடந்ததாக எந்தவிதமான தகவலும் இல்லை என தமிழக டிஜிபி சைலேந்திரபாபு கூறியுள்ளார்.
பிரதமர் உள்ளிட்ட வி.ஐ.பி.,க்களுக்கான பாதுகாப்பு ஏற்பாட்டில் குளறுபடி நடந்துள்ளதும், போலீஸ் பாதுகாப்பு கருவிகள் செயல்படாததும் வெட்ட வெளிச்சமாகி உள்ளது. பிரதமரின் சென்னை வருகையின்போது, போலீஸ் பாதுகாப்பில் குளறுபடி நடந்துள்ளதாக, கவர்னரிடம் தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை அளித்த புகார் உண்மை என்பதை உறுதிப்படுத்தும், உளவுத் துறை கடிதம் சிக்கியுள்ளது.
தமிழக காவல் துறை உளவுப்பிரிவு கூடுதல் இயக்குனர், அக்., 30ம் தேதி, அனைத்து காவல் கண்காணிப்பாளர்களுக்கும் அனுப்பியுள்ள கடிதம், பாதுகாப்பு குறைபாடுகளைச் சுட்டிக்காட்டுகிறது. இந்த கடித விவரத்துடன் தினமலரில் தலைப்பு செய்தியாக வெளியிட்டிருந்தது.
இந்நிலையில், சைபர் குற்றங்கள் குறித்த ஒரு நாள் கருத்தரங்கில் கலந்து கொண்ட பிறகு டிஜிபி சைலேந்திரபாபு நிருபர்களிடம் கூறியதாவது: எந்த வங்கியில் இருந்தும், மக்களை தொடர்பு கொண்டு, வங்கிக்கணக்கு மற்றும் கடவுச்சொல்லை கேட்க மாட்டார்கள். இதை தெரிந்து கொண்டால், மோசடியில் இருந்தும், ஏமாறுவதில் இருந்தும் தப்பிக்கலாம்.
பிரதமர் வருகையின் போது குளறுபடி நடந்ததாக எந்தவிதமானதகவல் இல்லை. நல்ல முறையில் நடந்தது. அது குறித்து எந்த ஆலோசனையும் நடக்கவில்லை. போலீசார் பயன்படுத்தும் எல்லா உபகரணங்களும் எப்படி உள்ளது என்பது குறித்து ஆய்வு செய்து, காலாவதியானவற்றை மாற்றும் பழக்கம் நீண்ட காலமாக உள்ளது.
தமிழகத்தில் அதிகளவு தரமான உபகரணங்கள் உள்ளது. தமிழகத்தில் இருந்து உபகரணங்கள், அண்டை மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. பழையது மாற்றுவது புதிது வாங்குவது வழக்கமான ஒன்று தான்

தமிழகத்தில் உள்ள அனைத்து உபகரணங்களும் நவீன தொழில்நுட்பத்துடன், நல்ல நிலையில் உள்ளது. இதனால் தான் அண்டை மாநிலங்களில் இருந்து நம்மிடம் வாங்கி செல்கின்றனர். நம்மிடம் நிறைய உபகரணங்கள், அளவுக்கு அதிகமாக 2 மடங்குக்கும் அதிகமாக உள்ளது.
எதை வைத்திருக்க வேண்டும். எதை களைய வேண்டும் என்பதை ஆய்வு செய்வது வழக்கம். அது தான் நடந்து வருகிறது. பிரதமர் வருகை குறித்து எஸ்பிஜி -யிடம் இருந்து தகவல் இல்லை. சிறப்பாக நடந்து முடிந்ததாக தகவல் தெரிவித்தனர்.
தமிழகத்தில் இருந்து 15 வழக்குகளை தேசிய புலனாய்வு முகமை விசாரிக்கிறது. அது குறித்து தகவல் பரிமாற அதிகாரிகள் வந்தனர். அந்த கூட்டத்தில், இது குறித்த வழக்குகளை விசாரிக்கும் தமிழக போலீஸ் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இவ்வாறு சைலேந்திரபாபு கூறினார்.