சென்னை: சென்னை எழும்பூர் - திருச்செந்துார் விரைவு ரயிலை, பாபநாசம் நிலையத்தில் நிறுத்த ஒப்புதல் அளித்ததற்கு, ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவுக்கு, மத்திய அமைச்சர் எல். முருகன் நன்றி தெரிவித்துள்ளார்.
சென்னை எழும்பூரில் இருந்து துாத்துக்குடி மாவட்டம், திருச்செந்துாருக்கு, சென்னை எழும்பூர் - திருச்செந்துார் விரைவு ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயிலை, தஞ்சை மாவட்டம், பாபநாசம் நிலையத்தில் நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறு, ரயில்வே அமைச்சருக்கு, அண்ணாமலை கோரிக்கை வைத்தார்.
அதை ஏற்று, பாபநாசம் நிலையத்தில் விரைவு ரயில் நிறுத்த ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது. இந்த விபரத்தை, கடிதம் வாயிலாக, அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், அண்ணாமலைக்கு தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், இது குறித்து, மத்திய அமைச்சர் எல். முருகன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: இனி வாரத்திற்கு 7 நாளும் மேட்டுப்பாளையம் - கோயம்புத்தூர் இடையே ரயில் சேவை. மேட்டுப்பாளையம் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று அப்பகுதி மக்களின் அன்றாட பயன்பாட்டிற்காகவும், தினசரி கல்லூரி பயிலும் மாணவர்களின் தேவையை நிறைவு செய்யும் வகையில் , மேட்டுபாளையம்- கோவை வரை செல்லும் ரயில் இனி வாரத்தின் 7 நாட்களும் இயக்கப்படும் தினசரி சேவையை அதிகரிக்க ஒப்புதல் வழங்கிய மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவுக்கு மத்திய அமைச்சர் நன்றி தெரிவித்துள்ளார்.
மேலும் எழும்பூர் -- திருச்செந்தூர் வரை செல்லும் விரைவு ரயில் சேவையை பாபநாசம் பகுதி மக்களின் அன்றாட பயன்பாட்டிற்காக அப்பகுதி ரயில் நிலையத்தில் நிறுத்த ஒப்புதல் அளித்தமைக்கும் நன்றி. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.