புதுடில்லி: தங்கள் வழிகாட்டு நெறிமுறைகளை (பாலிசி) மீறியதாக கடந்த ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் மட்டும் இந்திய பயனர்கள் பதிவேற்றிய 17 லட்சம் வீடியோக்களை நீக்கியுள்ளதாக யு-டியூப் நிறுவனம் தெரிவித்துள்ளது.
பிரபல வீடியோ தளமான யு-டியூப், தங்களது பாலிசிகளை மீறி செயல்படும் சேனல்கள், வீடியோக்களை நீக்கி வருகிறது. அந்த வகையில் இந்தாண்டின் முதல் காலாண்டில் (ஜனவரி முதல் மார்ச் வரை) இந்தியாவில் இருந்து பதிவேற்றப்பட்ட 11 லட்சம் வீடியோக்களை நீக்கி இருந்தது.
இந்த நிலையில், மூன்றாம் காலாண்டான ஜூலை முதல் செப்டம்பர் மாத இடைவெளியில் மட்டும் தங்கள் நிறுவன பாலிசியை மீறியதற்காக இந்திய பயனர்கள் பதிவேற்றிய 17 லட்சத்திற்கும் அதிகமான வீடியோக்களை நீக்கியுள்ளதாக யு-டியூப் தெரிவித்துள்ளது.

உலகம் முழுவதும் அதே காலக்கட்டத்தில் 56 லட்சத்திற்கும் அதிகமான வீடியோக்களை நீக்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் 36 சதவீத வீடியோக்கள் ‛ஆட்டோமேட்டிக்' சாப்ட்வேர் மூலமாக ஒருவர் கூட பார்ப்பதற்கு முன்னதாக நீக்கப்பட்டுள்ளதாகவும், 31 சதவீத வீடியோக்கள் அப்லோடு செய்யப்பட்டு 1 முதல் 10 பார்வைகளை தாண்டுவதற்குள் நீக்கப்பட்டுள்ளதாகவும் யு-டியூப் தெரிவித்தது.
அதேபோல், பாலிசிகளை மீறிய 73.7 கோடி கமெண்ட்களையும் நீக்கியுள்ளது. இதில் 99 சதவீத கமெண்ட்கள் ‛ஆட்டோமேட்டிக்' சாப்ட்வேர் மூலமாக நீக்கியுள்ளது.