சென்னை: பள்ளிக் கல்வி துறை இயக்குனரகம் அமைந்துள்ள டி.பி.ஐ., வளாகத்தில் முன்னாள் திமுக பொதுச்செயலாளர் அன்பழகனுக்கு சிலை அமைக்கப்படும் என திமுக அரசு அறிவித்துள்ளது. பள்ளிக்கல்வி வளாகத்தில் கட்சி சாயம் பூசுவதற்கு ஆசிரியர்கள் உட்பட பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில், தி.மு.க., ஆட்சி துவங்கியதில் இருந்து, பள்ளிக்கல்வி துறையிலும் சர்ச்சைகளும், சலசலப்புகளும் ஒவ்வொரு நாளும் வழக்கமாகி விட்டன. சென்னையில் பள்ளிக் கல்வி துறை இயக்குனரகம் அமைந்துள்ள டி.பி.ஐ., வளாகம், ஆங்கிலேயர் காலத்தில் உருவாக்கப்பட்ட பாரம்பரியம் மிக்கது. சமீபத்தில் கூட பாரம்பரிய கட்டடத்தின் நுழைவு பகுதியில், ஈ.வெ.ரா., மற்றும் அண்ணாதுரையின், வண்ணம் தீட்டப்பட்ட, 'மெகா சைஸ்' படங்கள் பொருத்தப்பட்டது சர்ச்சையானது. இந்த வளாகத்தில், அ.தி.மு.க., ஆட்சி காலத்தில், புதிதாக அடுக்குமாடி கட்டடம் கட்டப்பட்டது. அதற்கு, முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., பெயர் சூட்டப்பட்டது.
இந்நிலையில், தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், மறைந்த முன்னாள் அமைச்சர் அன்பழகனுக்கு சிலை வைக்கவும், அலங்கார வளைவு அமைக்கவும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு உள்ளது. முதற்கட்டமாக, நுங்கம்பாக்கம் கல்லூரி சாலையில், டி.பி.ஐ., வளாகத்தின் மத்திய பகுதி நுழைவு வாயிலில், அன்பழகன் பெயரில் அலங்கார வளைவு அமைக்கும் பணிகள் துவங்கியுள்ளன. அடுத்த மாதம் 19ம் தேதி, அன்பழகனின் நுாற்றாண்டு பிறந்த தினத்தை ஒட்டி, இந்த வளைவை திறப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான பணிகளை, பொதுப்பணித் துறை துவங்கியுள்ளது.

அதுமட்டுமல்லாமல், பள்ளிக் கல்வி இயக்குனரக கட்டடத்தின் முன் பகுதியில், தேசிய கொடிக் கம்பம் இருக்கும் பகுதியில், அன்பழகனுக்கு சிலை அமைக்கவும் திமுக அரசு திட்டமிட்டிருந்தது. அதற்கான அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. டி.பி.ஐ வளாகத்தில் அன்பழகனின் திருவுருவச்லை நிறுவப்படுவதுடன் அவ்வளாகம் ‛பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகம்' என அழைக்கப்படும் என்றும் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான திட்டங்கள், செயல்பாடுகளில் கட்சி சாயம் பூசும் திமுக., பள்ளிக்கல்வியிலும் கட்சி சாயம் பூசும் இந்த நிகழ்வுகளுக்கு ஆசிரியர்கள் உட்பட பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.