ஆமதாபாத்: தொழில்நுட்பம், மருத்துவம் மற்றும் சட்டப்படிப்புகளில் பிராந்திய மொழிகள் அல்லது ஹிந்தியை மாநிலங்கள் ஊக்குவிக்க வேண்டும். அப்போது தான் ஆங்கிலம் பேச முடியாத மாணவர்களின் திறமையை நாடு பயன்படுத்தி கொள்ள முடியும் என மத்திய உள்துறை அமைச்சரும், பாஜ., மூத்த தலைவருமான அமித்ஷா கூறியுள்ளார்.
இது தொடர்பாக பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு அமித்ஷா அளித்த பேட்டி: தொழில்நுட்பம், மருத்துவம் மற்றும் சட்டப்படிப்புகளை பிராந்திய அல்லது ஹிந்தி மொழியில் கற்பிக்க வேண்டும். இந்த படிப்புகளில் உள்ள பாடங்களை பிராந்திய மொழிகளில் மொழிப்பெயர்ப்பதற்கான நடவடிக்கைகளில் மாநில அரசுகள் ஈடுபட வேண்டும். மாணவர்கள், தங்களது தாய்மொழியில் படிக்கும் போது, அவர்களின் உண்மையான சிந்தனை வளர்வதுடன், ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகளில் ஈடுபட உதவும். தாய் மொழியில் எளிதாகவும், வேகமாகவும் கற்று கொள்ள முடியும். உயர்கல்வியில் நாட்டின் திறமை மேம்படுத்தும்.
இன்று நாட்டில் உள்ள திறமைசாலிகளில் 5 சதவீதத்தை மட்டும் பயன்படுத்துகிறோம். இந்த முயற்சியை மேற்கொண்டால், அனைத்து திறமைசாலிகளையும் நம்மால் பயன்படுத்தி கொள்ள வேண்டும். அந்த 5 சதவீதம் பேரும் ஆங்கில கல்வியில் படித்தவர்கள் தான். இதனால், நான் ஆங்கில வழிக்கல்விக்கு எதிரானவன் அல்ல. தாய்மொழியில் படிக்கும் போது, மாணவர்களின் உண்மையான சிந்தனை வேகமாக வளரும். இதற்கும் ஆராய்ச்சிக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது.
வரலாற்று அறிஞர்களால் கவனிக்கப்படாத 300 மக்களின் கதாநாயகர்களையும், அதேபோன்ற, இந்தியாவை ஆண்டு சிறந்த நிர்வாகத்தை கொடுத்த மன்னர்களை பற்றியும் மாணவர்கள் படிக்க வேண்டும். நாட்டின் உண்மையான வரலாற்றை படிக்க வேண்டிய நேரம் தற்போது வந்துவிட்டது. நமது வரலாறு மற்றும் அதில் உள்ள திரிபுகள் பற்றி மற்றவர்கள் எழுதியதை பற்றி நாம் ஒரு சாயலை உருவாக்கி அழுவோம். நமது உண்மையான வரலாற்றை மாணவர்கள் அறிய வேண்டும். இவ்வாறு அமித்ஷா கூறினார்.