புதுடில்லி: தமிழக டேபிள் டென்னிஸ் வீரர் சரத் கமலுக்கு, 'கேல் ரத்னா' விருதும், பிரக்ஞானந்தா, இளவேனில், ஜெர்லின் அனிகா ஆகியோருக்கு 'அர்ஜுனா' விருதுகளையும் ஜனாதிபதி திரவுபதி முர்மு வழங்கினார்.

சர்வதேச போட்டிகளில் பதக்கம் வெல்லும் இந்திய வீரர், வீராங்கனைகளுக்கு ஆண்டுதோறும் கேல்ரத்னா மற்றும் அர்ஜூனா விருதும், வாழ்நாள் சாதனையாளருக்கு தயான் சந்த் விருதும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான தேசிய விளையாட்டு விருதுக்கு தேர்வு செய்யப்பட்டு இருக்கும் வீரர், வீராங்கனைகளின் பட்டியலை மத்திய விளையாட்டு அமைச்சகம் சமீபத்தில் அறிவித்தது.
இந்நிலையில், கேல் ரத்னா, அர்ஜூனா உள்ளிட்ட தேசிய விளையாட்டு விருதுகள் வழங்கும் விழா டில்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் இன்று நடைபெற்றது. தமிழக டேபிள் டென்னிஸ் வீரர் சரத் கமலுக்கு, 'கேல் ரத்னா' விருதும், பிரக்ஞானந்தா, இளவேனில், ஜெர்லின் அனிகா 'அர்ஜுனா' விருதுகளையும் ஜனாதிபதி திரவுபதி முர்மு வழங்கினார்.
'அர்ஜூனா' பிரக்ஞாந்தா:
உலக சாம்பியன் நார்வேயின் கார்ல்சனை பல முறை வீழ்த்திய பிரக்ஞானந்தா, சென்னையில் நடந்த செஸ் ஒலிம்பியாட் தொடரில் வெண்கலம் வென்றார். சமீபத்தில் டில்லியில் நடந்த ஆசிய செஸ் தொடரில், 'நம்பர்-1' இடம் பிடித்து தங்கப்பதக்கம் கைப்பற்றி அசத்தினார்.

டேபிள் டென்னிஸ் வீரர், சரத் கமல்:
பர்மிங்காமில் நடந்த காமன்வெல்த் விளையாட்டில் அசத்தியவர் சரத் கமல். இவர் ஆண்கள் ஒற்றையர், கலப்பு இரட்டையர், அணிகள் பிரிவு என 3 தங்கப்பதக்கம் கைப்பற்றினார். ஆண்கள் இரட்டையரில் வெள்ளி வென்றார். ஒட்டுமொத்தமாக காமன்வெல்த் விளையாட்டில் 7 தங்கம், 3 வெள்ளி, 3 வெண்கலம் என 13 பதக்கங்கள் வென்று சாதித்தார். 2018, ஆசிய விளையாட்டில் இரண்டு வெண்கலம் கைப்பற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜெர்லின் அனிகா:
காதுகேளாதோருக்கான 'டெப்லிம்பிக்கில் அசத்திய இவர், ஒற்றையர், கலப்பு இரட்டையர், அணிகள் பிரிவு என 3 தங்கம் கைப்பற்றி ஜொலித்தார்.
மேலும் தமிழகத்தின் துப்பாக்கிசுடுதல் வீராங்கனை இளவேனில், சீமா புனியா (வட்டு எறிதல்), அவினாஷ் சபிள் (தடகளம்), லக்சயா சென், பிரனாய் (பாட்மின்டன்), பக்தி குல்கர்னி (செஸ்), ஸ்ரீஜா அகுலா (டேபிள் டென்னிஸ்), சரிதா (மல்யுத்தம்), மானசி ஜோஷி (பாரா பாட்மின்டன்) உட்பட 25 பேர் 'அர்ஜுனா' விருதுகளை ஜனாதிபதி வழங்கினார்.
மேலும் வாழ்நாள் சாதனையாளருக்கான தயான் சந்த் விருதுகளை, அஷ்வினி (தடகளம்), தரம்வீர் சிங் (ஹாக்கி), சுரேஷ் (கபடி), பகதுர் குருங் (பாரா தடகளம்) ஆகியோருக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, விருதுகளை வழங்கினார்.