சென்னை ஐ.ஐ.டி.,யை சேர்ந்த ரப்தார் பார்முலா ரேசிங் என்ற அணியைச் சேர்ந்த 45 மாணவர்கள் இணைந்து மின்சாரத்தில் இயங்கும் முதல் பந்தயக் காரை வடிவமைத்து அறிமுகப்படுத்தியுள்ளனர். இந்தக் கார் 0 - 100 கி.மீ.,யை 4 நொடிகளில் எட்டும் என தெரிவித்துள்ளனர்.
ரப்தார் அணி சென்னை ஐஐடியில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த 45 மாணவர்களைக் கொண்டது. ஐஐடி மெட்ராஸ் புதுமை முயற்சிகளுக்கான மையத்தின் (Centre for Innovation) போட்டிக் குழுக்களில் ஒன்றாக இது உள்ளது. இந்தக் குழு பொறியியல் மாணவர்களிடையே உலகத்தர தொழில்நுட்ப வல்லமையை வளர்க்கவும், தொழில்துறையில் தரமான பொறியியல் நடைமுறைகளை மேம்படுத்தவும் உள்ளது. மேலும் சர்வதேச அளவிலான போட்டிகளில் இந்தியாவின் சார்பில் பங்கேற்பதற்கான வாய்ப்பை எதிர்நோக்கி காத்திருக்கிறது.
![]()
|
பத்தாண்டுகளுக்கு முன்னர் தொடங்கப்பட்ட ரப்தார் குழு 2012ம் ஆண்டு முதல் கார் தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறது. 2017ம் ஆண்டு சர்வதேச டைனமிக் நிகழ்வில் வெற்றி பெற்ற முதல் இந்திய அணி இதுவாகும். 2020ல் பார்முலா பாரத் சாம்பியன்கள், 2022ல் மின்சார வாகனம் தொடர்பான போட்டியில் வெற்றியாளர் என பல சாதனைகளை இக்குழு படைத்துள்ளது. தற்போது இந்தியாவிலேயே முதன் முறையாக மின்சாரத்தில் இயக்கக்கூடிய 'பார்முலா ரேஸ் காரை' வடிவமைத்துள்ளது.
![]()
|
இந்த முதல் மின்சார பந்தய கார் 0 - 100 கி.மீ., வேகத்தை வெறும் 4 நொடிகளில் எட்டும் திறன் கொண்டது. இது மட்டுமின்றி இந்த கார் அதிகபட்சமாக 160 கி.மீ., வேகம் வரை செல்லும் என கூறப்படுகிறது. இந்த காரில் சக்தி என்ற சிப் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது முழுவதும் இந்தியாவிலேயே உருவாக்கப்பட்ட சிப், இது காரின் அனைத்து மின்னணு பாகங்களையும் கட்டுப்படுத்தும்.
![]()
|
மின்சார வாகனங்களில் உள்ள பிரச்னைகளில் ஒன்று பேட்டரி சூடாவது. அதனை தடுக்க தெர்மல் மேனேஜ்மென்ட் சிஸ்டம் இந்த காரில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது பேட்டரி சூடாகி வெடிப்பதை தடுக்கும். எனவே இந்த கார் பாதுகாப்பானது, நீடித்து உழைக்கக் கூடியது என்கின்றனர். மேலும் இந்த காரின் சார்ஜிங் வசதியில் பல புதிய தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்துள்ளனர்.
ஐஐடி கல்வி நிறுவன இயக்குநர் காமகோடி இந்த காரை பொது பார்வைக்காக அறிமுகப்படுத்தி வைத்தார். இந்நிகழ்ச்சியில் அவர் பேசும் போது, "இன்று உலகமே மின்சார வாகனத்துக்கு மாறி வருகிறது. சர்வதேச அளவில் மின்சார வாகன துறை புதிதாகப் பிறந்த குழந்தை. இது வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. வருங்காலத்தில் சாலைகளில் பெரும்பாலும் மின்சார வாகனங்கள் இருப்பதை பார்க்க முடியும்"என கூறினார்.
![]()
|
இந்த நிகழ்ச்சியில் இந்த காருக்கான செயல் முறை விளக்கம் அளிக்கப்பட்டது. அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஜெர்மனியில் நடக்கவுள்ள 'பார்முலா ஸ்டூடன்ட் ஜெர்மனி' போட்டியிலும் இந்தியா சார்பில் இந்தக் கார் பங்கேற்கும். வரும் 2023ல் ஜனவரியில் கோவை, 'காரி மோட்டார் ஸ்பீடுவேயில்' நடக்கவுள்ள கார் பந்தயத்திலும் இதனை களமிறக்க திட்டமிட்டுள்ளனர்.