புதுடில்லி:'சாம்சங் இந்தியா' நிறுவனம், புதிதாக 1,000 பொறியாளர்களை, ஐ.ஐ.டி., உள்ளிட்ட சிறந்த கல்வி நிறுவனங்களிலிருந்து, அதன் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பிரிவு பணியில் அமர்த்த திட்டமிட்டு உள்ளதாக தெரிவித்து உள்ளது.
இது குறித்து, சாம்சங் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளதாவது: புதுமை மற்றும் அதிநவீன தொழில்நுட்பத்தில் கவனத்தை வலுப்படுத்தும் விதமாக, இந்தியாவின் தலைசிறந்த பொறியியல் நிறுவனங்களில் இருந்து, புதிய திறமையாளர்களை பணியமர்த்த திட்டமிடப்பட்டு உள்ளது.
தேர்தெடுக்கப்படும் இளம் பொறியாளர்கள், அடுத்த ஆண்டில், பணியில் சேர்க்கப்படுவர். பெங்களூரு, நொய்டா, டில்லி ஆகிய இடங்களில் உள்ள ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பிரிவிலும், பெங்களூரில் உள்ள 'சாம்சங் செமிகண்டக்டர் இந்தியா' ஆராய்ச்சி மையத்திலும் பணியாற்றுவர்.
மேலும் இத்தகைய முயற்சிகள், 'டிஜிட்டல் இந்தியா' திட்டத்துக்கு வலு சேர்க்கும் விதமாகவும் இருக்கும். இவ்வாறு சாம்சங் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.