முதல்வர் ஸ்டாலின்: விமர்சனங்களுக்கு எதிரானவர்கள் அல்ல நாங்கள். விமர்சனங்களை வரவேற்கிறேன்; விஷமத்தனம் கூடாது. விமர்சனம் செய்பவர்களுக்கு, அதற்கான அருகதை இருக்க வேண்டும். கையில் ஆட்சி இருந்த போது, எதையும் செய்யாமல் இருந்து விட்டு, இன்று மகா யோக்கியரை போல, உலக மகா உத்தமனைப் போல பேசுபவர்களுக்கு, விமர்சனம் செய்வதற்கான யோக்கியதை இல்லை.
டவுட் தனபாலு: 'கையில் ஆட்சி இல்லாத போது, அதை செய்வோம், இதை செய்வோம் என வானளாவிய வாக்குறுதிகளை வாரிவிட்டு, ஆட்சியில் அமர்ந்த பின் அவற்றை கண்டு கொள்ளாமல் இருப்பவர்களுக்கு, எங்களை விமர்சிக்க யோக்கியதை இல்லை' என, எதிர்க்கட்சி தரப்பில் பதிலடி கொடுத்தால் என்ன பதில் சொல்லுவீங்க என்ற, 'டவுட்' வருதே!
சிவசேனா மாநில தலைவர் திருமுருக தினேஷ், ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள மனு: 'தனி தமிழ்நாடு' என்ற கோரிக்கையை வி.சி., கட்சியின் தலைவரும், லோக்சபா எம்.பி.,யுமான திருமாவளவன் அடிக்கடி பேசி வருகிறார். பதவி பிரமாணத்தின் போது எடுத்த உறுதிமொழிக்கு புறம்பாக செயல்படும் திருமாவளவனை, வரும் லோக்சபா கூட்டத் தொடரில் பங்கேற்க அனுமதிக்க கூடாது.
டவுட் தனபாலு: 'அப்பாடா... லீவ் கிடைச்சிடுச்சு'ன்னு உற்சாகமா ஊரை சுற்ற போயிடுவாங்க... இதுபோன்று பேசுபவர்களுக்கு எம்.பி.,க்கான சம்பளம், இதர சலுகைகள் 'கட்' செய்யப்படும் என சட்டம் கொண்டு வந்தால், பொங்குற பால்ல தண்ணி ஊற்றிய மாதிரி அடங்கிடுவாங்க என்பதில், 'டவுட்'டே இல்லை!
தமிழக பா.ஜ., மூத்த தலைவர் ஹெச்.ராஜா: அரியலுாரில் நடைபெற்ற விழாவில் முதல்வர் ஸ்டாலின், தமிழகம் அமைதி பூங்காவாக திகழ்வதாகவும், இதனால் சிலருக்கு வயிற்றெரிச்சல் ஏற்பட்டுள்ளதாகவும் கூறியிருக்கிறார். தமிழகத்தில் தினம் தினம் கொலைகள், கொள்ளைகள், திருட்டுகள் நடக்கின்றன. கோவையில் தற்கொலை படை தாக்குதல் நடந்துள்ளது. பிரிவினைவாதம், தேச விரோத சக்திகள் தலைவிரித்தாடுகின்றன.
டவுட் தனபாலு: முதல்வர், எந்த ஒரு கட்சி அல்லது தலைவர்னு யார் பெயரையும் குறிப்பிட்டு குறை சொல்லவில்லை... ஆனா, 'அவர் எங்களைத்தான் திட்டிஇருக்கார்'னு, 'வாலன்டியரா' வண்டியில ஏறணுமான்னு தான் எங்களுக்கு, 'டவுட்!'