மரகதம் சிம்மன், சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'தமிழக கோவில்களில் அர்ச்சகராக பணிபுரிய, ஓராண்டு பயிற்சி போதும்' என்று, அறநிலையத் துறை கூறுவது நகைப்புக்குரியதாக தெரிகிறது. வேதங்கள், ஆகம விதிகள், சாஸ்திரங்கள் பயில, நிச்சயமாக ஓராண்டு போதவே போதாது. நான்கு வேதங்கள், ஆறு சாஸ்திரங்கள், திவ்ய பிரபந்த பாசுரங்கள், தேவாரம், திருவாசகம் என, படிக்க வேண்டியவை எவ்வளவோ இருக்கின்றன.
சமஸ்கிருதத்தில் உள்ள வேதங்கள், சாஸ்திரங்களை படிக்காவிட்டாலும், தமிழில் உள்ள ஆகமவிதிகள், குடமுழுக்கு சம்பந்தமான விதிகள், தேவாரம், திருவாசகம், நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் உள்ள நாலாயிரம் பாடல்கள் மற்றும் பல தெய்வங்களை பற்றிய தோத்திரங்களை படித்து அறிந்து கொள்ள குறைந்தபட்சம், 10 ஆண்டு களாகும்; ஓராண்டில் எதை பயின்று அர்ச்சகராவர் என்று தெரியவில்லை.
நான்காண்டு படிக்க வேண்டிய இன்ஜினியரிங், ஐந்தாண்டு பயில வேண்டிய மருத்துவ படிப்பு போன்றவற்றை, ஓராண்டில் படித்து இன்ஜினியராகவும், மருத்துவராகவும் பணியாற்ற முடியுமா... முடியாது என்பது எல்லாருக்கும் தெரியும்.
அதுபோலவே, சாஸ்திர சம்பிரதாயங்களை நன்கு தெரிந்து அர்ச்சகராவதற்கு, குறைந்த பட்சம் ஐந்தாண்டுகளாவது தேவை. அரைகுறையாக ஓராண்டில் படித்து அர்ச்சகராவது, எட்டாம் வகுப்பு படித்து விட்டு, ஆசிரியராகலாம் என்று கூறுவது போலவே இருக்கும். நன்கு படித்து தேர்ந்த அர்ச்சகர்களையே, பக்தர்கள் விரும்புவர். ஓராண்டில் படித்து வரும் அர்ச்சகர்கள் நிலைமை, அவசர கோலத்தில் அள்ளித் தெளித்தது மாதிரியே இருக்கும்.
மேலும், தற்போது கோவிலுக்கு வரும் இளைஞர்கள் படித்தவர்களாக இருப்பதால், அவர்கள் கேட்கும் நியாயமான கேள்விகளுக்கு பதில் சொல்லவும் தெரிந்திருக்க வேண்டும். ஓராண்டில் ஏனோ தானோ என்று படித்து விட்டு அர்ச்சகராக வருவது, நையாண்டிக்குரிய விஷயமாகவே இருக்கும்.
அண்ணாதுரை பெயரை சேர்க்காதீங்க!
டி.ஈஸ்வரன்,
சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'அண்ணாதுரை காலத்தில்,
காங்கிரஸ் ஆட்சியை அகற்ற பெரிதும் உதவியது, 'ஒரு ரூபாய்க்கு மூன்று படி
அரிசி' என, அறிவிக்கப்பட்ட திட்டம்.
அன்று ஆரம்பித்த பொய், இன்றும்
அழிக்க முடியாத விருட்சமாகி விட்டது. 'தொட்டில் பழக்கம் சுடுகாடு வரை'
என்று, இதே பகுதியில் என்.ஏ.நாகசுந்தரம் என்ற வாசகர் கடிதம்
எழுதியிருந்தார்; அது தவறானது.
கடந்த 1967- சட்டசபை தேர்தல்
நேரத்தில், எம்.ஜி.ஆரை நடிகர் எம்.ஆர்.ராதா துப்பாக்கியால் சுட்ட செய்தி,
நாடு முழுதும் காட்டுத் தீயாக பரவியது.
சென்னை ராயப்பேட்டை அரசு
மருத்துவமனையில், கழுத்தில் கட்டுடன் சிகிச்சை பெற்று வந்த எம்.ஜி.ஆர்., -
தி.மு.க.,வுக்கு ஓட்டளிக்கும்படி, இரண்டு கைகளையும் துாக்கி வணங்கி,
மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.
இந்த புகைப்படம், அனைத்து
பத்திரிகைகளிலும் விளம்பரம் செய்யப்பட்டது. டாக்சி, சைக்கிள் ரிக் ஷா
போன்ற வாகனங்களின் பின்புறமும், இதுதொடர்பான போஸ்டர்கள் ஒட்டப்பட்டு,
தீவிரமாக தேர்தல் பிரசாரம் செய்யப்பட்டது.
எம்.ஜி.ஆர்., மீது
மக்களுக்கு ஏற்பட்ட அனுதாப அலை தான், காங்கிரஸ் ஆட்சியை அகற்ற பெரிதும்
உதவியது; இதை, அண்ணாதுரையே ஒப்புக் கொண்டுள்ளார். ஆட்சிக்கு வந்தவுடன், படி
அரிசி வழங்கும் திட்டத்தை அண்ணாதுரை துவக்கி வைத்தார்; இதற்கான விழாவும்
நடைபெற்றது; திட்டமும் செயல்பாட்டிற்கு வந்தது.
ஆனால், முதல்வர்
பதவியில் இருந்த அண்ணாதுரை, குறுகிய காலத்தில் காலமானதால், அவரது நல்ல
எண்ணம் நிறைவேற முடியாமல் போனது. நிதி நெருக்கடியால், படி அரிசி திட்டம்
கைவிடப்பட்டது; மக்களை ஏமாற்ற அவர் கனவிலும் நினைக்கவில்லை.
பொய்
சொல்லி ஆட்சிக்கு வந்து, சொத்துக்களை குவிக்க வேண்டும் என்ற ஆசை
அண்ணாதுரைக்கு இல்லை. அவருக்கிருந்த சொத்து இரண்டு வீடுகள் தான். எதையாவது
சொல்லி ஆட்சியை பிடிக்கும் எண்ணத்தில், 2006, 2021 தேர்தல்களின் போது,
சுயநலத்திற்காக தி.மு.க., அறிவித்த இலவச அறிவிப்புகளோடு, பொது நல
சிந்தனையுடன் அண்ணாதுரை அறிவித்த, ஒரு ரூபாய்க்கு மூன்றுபடி அரிசி
திட்டத்தை ஒப்பிடக்கூடாது.
தி.மு.க., என்ற குழந்தையை தொட்டிலில்
போட்டு, நல்லதை தான் ஊட்டி வளர்த்தார் அண்ணாதுரை. அந்த குழந்தை இன்றைய
வளர்ச்சியில் பொய் சொல்கிறது என்றால், அதற்கு அவர் காரணமல்ல. பொய்
பேசுபவர்கள் பட்டியலில், அண்ணாதுரை பெயரை சேர்ப்பதும் பெரும் தவறு!
ஸ்டாலினின் பொய் மூட்டைகள் தொடரும்!
என்.வைகைவளவன்,
மதுரையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'ஆயிரம் அரிதாரங்கள் பூசி
வந்தாலும், விழித்துக் கொண்ட தமிழனை வீழ்த்த முடியாது' என்கிறார்,
முத்துவேல் கருணாநிதி மகன் ஸ்டாலின்.
திராவிட மாயையில் சிக்கிய
தமிழன், 50 ஆண்டு களாக விழித்து கொள்ளாமல் இருப்பது தான் உண்மை நிலவரம்.
சமூக நீதி என்ற பெயரிலும், இடஒதுக்கீடு என்ற பெயரிலும், தமிழகத்தில் பெரும்
அநீதி இழைக்கப்படுகிறது.
தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் மற்றும்
பிற்பட்ட வகுப்பினர், உயர்ந்த நிலைக்கு சென்றாலும், அவர்களுக்கு கல்வி
மற்றும் வேலைவாய்ப்பில், இடஒதுக்கீட்டின் பலன் கிடைத்தபடி தானே இருக்கிறது;
இது எந்த வகையில் நியாயம்?
முற்பட்ட வகுப்பில் பிறந்த
பாவத்திற்காக, பலருக்கு இட ஒதுக்கீடு மறுக்கப்பட்டு, வறுமையில் தானே
வாடுகின்றனர். இந்த லட்சணத்தில், 'தமிழன் விழித்து விட்டான்; அவனை ஏமாற்ற
முடியாது' என்று முதல்வர் சொல்வதை எப்படி ஏற்க முடியும்?
தி.மு.க.,வினர்,
உண்மையிலேயே சமூக நீதி காவலர்கள் என்றால், பொருளாதாரத்தில் நலிந்த
பிரிவினருக்கு, 10 சதவீத இடஒதுக்கீடு அளித்த, மத்திய அரசின் சட்டத்தை
வரவேற்றிருக்க வேண்டும்.
உச்ச நீதிமன்றம் இடஒதுக்கீட்டை உறுதி
செய்த பின்னும், அதை எதிர்த்து மறுசீராய்வு மனு தாக்கல் செய்யப் போவதாக
கூறுகின்றனரே... அது எந்த வகையில் நியாயம்?
அரிதாரம் பூசி, ௫௦
ஆண்டுகளாக மக்களை ஏமாற்றி வருபவர்கள், திராவிட செம்மல்கள் தான் என்பது,
விழித்துக் கொண்ட தமிழனுக்கு மட்டுமே தெரியும்.
தமிழர்கள்
அனைவரும் உண்மையிலேயே விழித்துக் கொண்டிருந்தால், சட்டசபை தேர்தல்
நேரத்தில், தி.மு.க., அள்ளி விட்ட பொய்யான வாக்குறுதிகளை நம்பி
ஓட்டளித்திருக்க மாட்டார்கள்... முதல்வர் பதவிக்கு ஸ்டாலினும் வந்திருக்க
முடியாது!
அதனால், ஸ்டாலின் சொல்வது போல, தமிழர்கள் விழித்துக்
கொள்ளவில்லை; அவர்கள் இன்னும் துாக்கத்தில் தான் இருக்கின்றனர். அந்தத்
துாக்கம் தொடரும் வரை, ஸ்டாலின் உள்ளிட்டோரின் பொய் மூட்டைகள்
செல்லுபடியாகும்!
Advertisement