ஆமதாபாத் :பிரதமர் நரேந்திர மோடியின் செல்வாக்கை தக்க வைக்கும் அக்னிப் பரீட்சையாக பார்க்கப்படும் குஜராத் சட்டசபை தேர்தலின் முதல்கட்ட ஓட்டுப்பதிவு அமைதியாக நடந்து முடிந்தது. மொத்தம் 182 உறுப்பினர்கள் உடைய சட்டசபையில், முதல்கட்டமாக 89 இடங்களுக்கு மட்டும் இன்று ஓட்டுப்பதிவு நடந்தது. தேர்தலில் 788 வேட்பாளர்கள் களம் கண்டனர். மாலை 5 மணி வரையில் 56.88 சதவீத ஓட்டுகள் பதிவாகி உள்ளது.
குஜராத்தில், முதல்வர் பூபேந்திர படேல் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. கடந்த 27 ஆண்டுகளாக பா.ஜ.,வின் அசைக்க முடியாத கோட்டையாக உள்ள குஜராத் சட்டசபைக்கு இன்றும், 5ம் தேதியும் இரு கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. வரும் 8ல் ஓட்டுகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.இதுவரை பா.ஜ., - காங்கிரஸ் இடையே இருமுனை போட்டி நிலவி வந்த இங்கு, இந்த முறை ஆம் ஆத்மி களம் இறங்கி உள்ளது. இதற்காக, அக்கட்சியின் தலைவரும், புதுடில்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். ஆட்சிக்கு வந்தால் பல்வேறு இலவச திட்டங்களை வழங்க உள்ளதாக வாக்குறுதிகளை அள்ளி விட்டுள்ளார்.
குஜராத்தின் சவுராஷ்டிரா கட்ச் மற்றும் தென் பகுதியின் 19 மாவட்டங்களில் உள்ள 89 தொகுதிகளுக்கு முதல்கட்ட தேர்தல் இன்று நடந்தது. மொத்தம் 788 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இவற்றில் 70 பேர் பெண்கள். மொத்தம், 14 ஆயிரத்து 382 ஓட்டுச்சாவடிகளில் காலை 8:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை ஓட்டுப்பதிவு நடந்தது.
இந்த தேர்தல், பிரதமர் நரேந்திர மோடியின் செல்வாக்கை நிரூபிக்கும் அக்னிப்பரீட்சையாக பார்க்கப்படுகிறது. இன்றைக்கு தேர்தல் நடந்த 89 தொகுதிகளில், 48 தொகுதிகள் பா.ஜ., வசம் உள்ளன. 40 தொகுதிகள் காங்., வசமும், ஒரு தொகுதி சுயேச்சை வசமும் உள்ளன.
பா.ஜ., - காங்., ஆம் ஆத்மியை தவிர, பகுஜன் சமாஜ், சமாஜ்வாதி, மார்க்சிஸ்ட் கம்யூ., பாரதிய பழங்குடி கட்சி உட்பட, 36 கட்சிகள் களம் கண்டன. பா.ஜ., மற்றும் காங்., கட்சிகள் 89 தொகுதிகளிலும் போட்டியிட்டன. ஆம் ஆத்மி கட்சியின் சூரத் கிழக்கு தொகுதி வேட்பாளர், போட்டியில் இருந்து விலகியதை அடுத்து அக்கட்சி 88 தொகுதிகளில் மட்டுமே போட்டியிட்டன 339 சுயேச்சை வேட்பாளர்களும் களத்தில் உள்ளனர்.

சவுராஷ்டிரா பகுதியிலிருக்கும் தேவ்பூமி துவாரகா மாவட்டத்தின் கம்பாலியா தொகுதியில், ஆம் ஆத்மியின் முதல்வர் வேட்பாளர் இசுதான் காத்வி போட்டியிட்டார். அக்கட்சியின் மாநிலத் தலைவர் கோபால் இடாலியா, சூரத்தின் கட்டாகிராம் தொகுதியில் போட்டியிட்டார். பா.ஜ., சார்பில், கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜாவின் மனைவி ரிவபா ஜடேஜா, வடக்கு ஜாம்நகர் தொகுதியில் போட்டியிட்டார்
சவுராஷ்டிரா கட்ச் பகுதியில் உள்ள 54 தொகுதிகளில், காங்., தனி கவனம் செலுத்தி வருகிறது. இங்கு கூடுதல் இடங்களை கைப்பற்ற முடியும் என, அக்கட்சி நம்பிக்கையுடன் உள்ளது.
காரணம், 2012 தேர்தலில், இங்கு 16 தொகுதிகளில் வெற்றி பெற்ற காங்., 2017ல் 30 தொகுதிகளை கைப்பற்றியது. எனவே, இம்முறை கூடுதல் இடங்களை பெற முயற்சித்து வருகிறது.
அதே வேளையில், 2012ல் சவுராஷ்டிரா கட்ச் பகுதியில், 35 இடங்களை வென்ற பா.ஜ., 2017ல் 23 இடங்களை மட்டுமே வென்றது. தெற்கு குஜராத்தை பொறுத்தவரை 2012ல் 28 தொகுதிகளில் வென்ற பா.ஜ., 2017ல் 25 தொகுதிகளை மட்டுமே பிடிக்க முடிந்தது. அதே நேரத்தில், 2012ல் ஆறு இடங்களை பிடித்த காங்., 2017ல் 10 இடங்களை பிடித்தது.

குஜராத்தில் மொத்தம் 4 கோடியே 91 லட்சத்து 35 ஆயிரத்து 400 வாக்காளர்கள் ஓட்டளிக்க தகுதி பெற்றுள்ளனர். இதில், 2 கோடியே 39 லட்சத்து 76 ஆயிரத்து 670 பேர் இன்று ஓட்டளிக்க தகுதி பெறுகின்றனர். இன்றைய தேர்தலுக்காக, 34 ஆயிரத்து 324 மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், 38 ஆயிரத்து 749 வி.வி.பி.ஏ.டி., எனப்படும் ஓட்டுச்சீட்டு உறுதி இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன... 2.20 லட்சம் பயிற்சி பெற்ற அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் தேர்தல் பணியில் ஈடுபட்டனர்.

இது, பிரதமர் மோடியின் சொந்த மாநிலம் என்பதுடன், 2024 லோக்சபா தேர்தலுக்கான முன்னோட்டமாக கருதப்படுகிறது. இதனால் குஜராத் தேர்தல், பா.ஜ., மற்றும் பிரதமரின் மவுசை தக்க வைக்கும் அக்னிப் பரீட்சையாக பார்க்கப்படுகிறது.