பிரபல தமிழ் நடிகை ஐஸ்வர்யா: வாழ்க்கை என்றாலே, ஒவ்வொரு நாளும் பிரச்னை தான். அதேநேரத்தில், என்னோட பிரச்னை மாதிரியே அடுத்தவருக்கும் இருக்கும் என்று சொல்ல முடியாது.
அத்துடன், 'நான் எப்பவுமே திடமான நபர். இதுவும் கடந்து போகும்...' என்கிற உறுதி என்னிடம் இருக்கும். அது என்ன பிரச்னையாக இருந்தாலும், அதற்கான தீர்வை கண்டுபிடித்து விடுவேன். அதேசமயம், யாருக்கும் அறிவுரை கூற மாட்டேன்.
எல்லாருடைய பிரச்னைகளும் ஒன்றல்ல என்பதால், அவங்கவங்க பிரச்னையை, அவங்க அவங்க தான் சரி செய்தாகணும். 'ஐயோ எனக்கு பிரச்னை... நான் சாகப் போறேன்'னு சொன்னா, 'சரி'ன்னுடுவேன். கோழையாக இருந்து என்ன பிரயோஜனம்?
நான் சூழ்நிலைக்கு ஏற்ற மாதிரியே முடிவெடுக்கிறேன். 'பேலன்ஸ் இஸ் வெரி இம்பார்ட்டன்ட்!' எப்பவுமே சிரிச்சுக்கிட்டே சந்தோஷமாக இருக்க முடியாது. என்னால வாழ்க்கையில் நடிக்க முடியாது; ஆனால், பொது வாழ்க் கையில சில சமயம் அப்படி ஆயிடுது.
நீங்க ஏர்போர்ட்ல இருக்கீங்க... மூடு சரியில்ல... அப்போது, ஒரு ரசிகர் வந்து 'செல்பி' கேக்கிறார்ன்னு வெச்சுப்போம். 'என் மூடு சரியில்ல... போய்யா'ன்னு சொல்ல முடியாது; காரணம், அவர் அதிருப்தி அடைந்து விடுவார். நம்மை சரி பண்ணிக்கிட்டு 'போஸ்' கொடுக்க வேண்டியிருக்கும்.
அது மாதிரி, எப்ப பார்த்தாலும் ஒரே 'ரியாக் ஷன்' கொடுத்துட்டும் இருக்க முடியாது; சூழ்நிலைக்கு தகுந்த மாதிரி மாத்திக்க வேண்டியது தான்.
நாம் தைரியமாக, வெளிப்படையாக பேசினால், 'நெட்டிசன்' மச்சான்கள், 'வேலையே இல்லாம சும்மா கூவுதுடா'ன்னு சொல்லி, 'ட்ரோல்' பண்ணிடுவாங்க.
நான் யோகா பண்ணி, ஒரு வேளை தான் சாப்பிடுறேன்னு சொன்னதையே, 'காசில்லாமல் ஒரு வேளை தான் சாப்பிடுறாராம்'ன்னு 'கிளிக் பைட்' ஆக்கிட்டாங்க.
காசில்லன்னா, நான் பிளாட்பாரத்துல தான் உட்கார்ந்திருக்கணும். நான், 2016ல் இருந்து சோப் வித்துக்கிட்டு இருக்கேன்; அது, இப்பத்தான் வேகமா வெளியில பரவலாச்சு. 2012ல் இருந்து 'கேக்' வித்துட்டு இருக்கேன். நிறைய பேரு வாங்கி இருக்காங்க. இப்ப, வாடிக்கையாளர் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது.
சினிமாவில் எனக்கு நெருங்கிய நண்பர்கள் கிடையாது; ஆனால், எல்லாருடனும் 'ப்ரெண்ட்லி'யா இருப்பேன். என்னோட நெருங்கிய நண்பர்கள் ஸ்கூல், காலேஜ்ல படிச்சவங்க தான். சினிமாவுல முன்னாடி ஒரு குடும்பமாக இருந்தோம். வெளியூர் 'ஷூட்' போனா அங்கே இருக்குற மொத்த நாளும், ஒன்றாக அமர்ந்து சாப்பிடுவோம்; பேசுவோம்.
இப்ப அப்படி இல்லை... அவங்கவங்க 'போர்ஷன்' முடிஞ்ச உடனே, 'கேரவன்'ல போய் கதவை சாத்திக்கிறாங்க. 'டெக்னாலஜி' ரொம்ப முன்னேறி இருக்கிறது.