சென்னை:மாவட்ட கல்வி அலுவலகம் புதிதாக பிரிக்கப்பட்டதால், ஆசிரியர்கள் மற்றும் வட்டார கல்வி அலுவலர்களுக்கான சம்பளம் வழங்க, வழிகாட்டுதல் வெளியிடப்பட்டு உள்ளது.
தமிழக பள்ளிக்கல்வி துறையின் நிர்வாகம், ஒரு மாதத்திற்கு முன் சீரமைக்கப்பட்டது. அதில், உயர், மேல்நிலைப் பள்ளிகள்; தொடக்க, நடுநிலைப் பள்ளிகள்; தனியார் பள்ளிகள் என, மாவட்ட கல்வி அலுவலகம் பிரிக்கப்பட்டது. இந்த அலுவலக பிரிப்பின் காரணமாக, பள்ளிகளின் எல்லைகளும் பிரிக்கப்பட்டன.
அதேபோல், தொடக்க கல்விக்கு புதிதாக டி.இ.ஓ., - பி.இ.ஓ., அலுவலகங்கள் துவக்கப்பட்டன.
இந்நிலையில், இந்த புதிய அலுவலகங்களின் எல்லைகளில் இணைந்துள்ள அரசு பள்ளி ஆசிரியர்கள், பணியாளர்கள், கல்வி அலுவலர்கள் ஆகியோருக்கு, நவம்பர் மாத சம்பளம் வழங்க, வழிகாட்டுதலை தொடக்க கல்வி இயக்குனர் அறிவொளி வெளியிட்டுள்ளார்.
இதன்படி, மாவட்ட கல்வி அலுவலர்கள் உரிய முறையில், நிதித்துறையின் இணையதள குறியீட்டு எண்களை உருவாக்கி, தாமதமின்றி மாத ஊதியத்தை வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.